உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ஒவ்வொரு வாக்காளரின் பங்களிப்பு முக்கியம்: பிப்., 7ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

 ஒவ்வொரு வாக்காளரின் பங்களிப்பு முக்கியம்: பிப்., 7ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

ஊட்டி: 'முழுமையான, துல்லியமான மற்றும் பிழையற்ற வாக்காளர் பட்டியல் தயார்படுத்த ஒவ்வொரு வாக்காளரின் பங்களிப்பு முக்கியமானதாகும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய உத்தரவை அடுத்து, 2026ம் ஆண்டு ஜன., 1ம் தேதி தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. அதில், வாக்காளர் பட்டியல்கள் துல்லியமாக, பிழையற்றவையாக இருப்பதை உறுதி செய்வது முக்கிய நோக்கமாகும். இப்பணியை ஒட்டி, அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடத்தப்பட்டு, தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பணிகள் விபரம் வரும் டிச., 4ம் தேதி வரை கணக்கீட்டிற்கான பணிகள் நடைபெறுகிறது. அன்றைய தினம், ஓட்டுச்சாவடி நிலையங்களை மறு சீரமைத்தல், திருத்தியமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. டிச., 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை கட்டுபாட்டு அட்டவணையை மேம்படுத்துதல் மற்றும் வரைவு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. டிச., 9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. டிச., 9ம் தேதி முதல் 2026ம் ஆண்டு ஜன., 8ம் தேதி வரை ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் விண்ணப்பிக்கலாம். டிச., 9ம் தேதி முதல் ஜன., 31ம் தேதி வரை அறிவிப்பு கூட்டம், கணக்கீட்டு படிவங்கள் மீதான முடிவுகள் மேற்கொள்ளப்படும். மேலும், ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் மீதான தீர்வு காணுதல் ஆகியவை ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு, இவைகள் அனைத்தும் வாக்காளர் பதிவு அலுவலரால் முடிக்கப்பட வேண்டும். பட்டியல் சரிபார்த்தல் பணி 2026ம் ஆண்டு பிப்., 3ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலில் தர அளவுகளை சரிபார்த்தல் மற்றும் இறுதி வெளியீட்டிற்கு ஆணையத்தின் ஒப்புதல் பெற வேண்டும். 2026ம் ஆண்டு பிப்., 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், '' வீடு தோறும் கணக்கீட்டு பணிக்கு வரும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வாக்காளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். முழுமையான துல்லியமான மற்றும் பிழையற்ற வாக்காளர் பட்டியல் தயார்படுத்த ஒவ்வொரு வாக்காளரின் பங்களிப்பு முக்கியமானதாகும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை