| ADDED : அக் 08, 2024 11:22 PM
ஊட்டி : ஊட்டியில், போக்குவரத்து விதிகளை மீறி, வாகனங்களில் ஒட்டப்பட்ட போலி ஸ்டிக்கர்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் வாகனங்களில், தாங்கள் பணிபுரியும் துறையின் பெயர்களை எழுதியும்; 'ஸ்டிக்கராக' ஒட்டியும் பலர் இயக்கி வருகின்றனர். குறிப்பாக, 'பிரஸ் ஸ்டிக்கர்' களை ஓட்டி, போக்குவரத்து விதிகளை மீறி பலர் வாகனங்களில் பயணம் செய்வது அதிகரித்திருப்பதாக, மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவின் பெயரில், ஊட்டி ஆர்.டி.ஓ., தியாகராஜன் தலைமையில், நேற்று மாலை சேரிங்கிராஸ் பகுதியில், வாகன சோதனை பணி நடந்தது. அதில், விதிமீறி வாகனங்களில் ஒட்டப்பட்ட மற்றும் எழுதிய ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டன. அதனை ஓட்டிய நபர்களிடம் விசாரணை நடந்தது. ஆர்.டி.ஓ., தியாகராஜன் கூறுகையில்,''போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது. அதில், அரசு துறைகள்; 'பிரஸ்' ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வரும் நபர்களிடமும் விசாரணை நடக்கும்,'' என்றார்.