காபி அறுவடைக்கு விவசாயிகள் தயார்; நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை
பந்தலுார் : பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் காபி தோட்டங்களில், காபி கொட்டைகள் முதிர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. பந்தலுார் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில், தேயிலைக்கு அடுத்தபடியாக காபி விவசாயத்தில் அதிக அளவிலான விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். அதிக அளவிலான விவசாயிகள் 'ரொபஸ்டா' வகை காபி விவசாயத்தில் ஈடுபட்டு உள்ளனர். குறைந்த அளவு விவசாயிகளே அரபிக்கா வகை காபியை பயிரிட்டுள்ளனர்.காபி விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும், விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் வகையிலும், கூடலுார் அருகே கோழிப்பாலம் பகுதியிலும், பந்தலுார் அருகே கேரளா வயநாடு பகுதிகளும் காபி வாரிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்படும் காபி கொட்டைகள் உலர வைக்கப்பட்டு, மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இவர்கள் காபி கொட்டைகளின் தோலை உரித்த பின், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இதனால், காபி விவசாயம் விவசாயிகளுக்கு நல்ல பலனை கொடுத்து வருகிறது. நடப்பாண்டு காபி விவசாயம் நல்ல நிலையில் உள்ளதுடன், தற்போதே பழுக்க துவங்கியுள்ளது. இதனால் இன்னும் ஒரு மாதத்தில் காபி அறுவடை பணி துவங்கும் நிலையில் உள்ளது. விவசாயி ஜோஸ் கூறுகையில், 'தேயிலை விவசாயம் விவசாயிகளுக்கு போதிய பலனை தராத நிலையில், பராமரிப்பு பணிகள் குறைவாகவும், ஆண்டுக்கு ஒரு முறை நல்ல பலனை தரும் வகையிலும் காபி விவசாயம் உள்ளது. தற்போது, போதிய அளவு விளைச்சல் உள்ள நிலையில், மார்க்கெட்டில் விலையும் கிடைப்பதால், காபி விவசாயத்தை நம்பி உள்ள விவசாயிகளுக்கு நல்ல பலனை தரும்,' என்றார்.