வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம்
கூடலுார், ; தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அ.தி.மு.க., சார்பில், கூடலுாரில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.'கூடலுார் தொகுதியில் நிலவும் பிரச்னைகளுக்கு, ஆட்சிக்கு வந்தவுடன் தீர்வு காணப்படும்,' என, தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, காந்தி திடலில் அ.தி.மு.க., சார்பில் நேற்று, உண்ணாவிரத போராட்டம் நடந்தது.நகர செயலாளர் அனுப்கான் வரவேற்றார். கூடலுார் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் தலைமை வகித்தார். போராட்டத்தின் போது, 'செக்ஷன்-17 நில பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்; குறிப்பிட்ட நிலப்பகுதியில் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்; தனியார் வன பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; மின் இணைப்பு இல்லாத குடும்பங்களுக்கு, மாதம் 5 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும்; கூடலுார் அரசு மருத்துவமனையில் டாக்டர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; அரசு, தனியார் தோட்ட தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகள் வழங்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் வினோத், முன்னாள் அமைச்சர் மில்லர், வர்த்தக அணி மாநில தலைவர் சஜிவன், நெல்லியாளம் நகர செயலாளர் ராஜா, கூடலுார் ஒன்றிய செயலாளர் பத்மநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.