உபாசி குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியால் அச்சம்
குன்னுார்; குன்னுார் உபாசி வளாகத்தில் அடிக்கடி வந்து செல்லும் கரடியால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்கின்றன. இந்நிலையில், நேற்று அதிகாலை, 2:00 மணி அளவில், குன்னுாரில் உள்ள தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க அலுவலகம் (உபாசி) மற்றும் குடியிருப்பு வளாகம், வேளாண் ஆராய்ச்சி மைய பகுதிகளில் கரடி உலா வந்தது. அங்குள்ள வேளாண் ஆராய்ச்சி மைய உதவி இயக்குனரின் வீட்டை உடைக்க முயற்சி செய்து, திரும்பி சென்றது. இங்கு வனத்துறையினர் ஆய்வு செய்து, கரடியை பிடிக்க, 2 நாட்கள் கூண்டு வைத்திருந்தனர். எனினும் இங்கு சிக்காத நிலையில் அதனை எடுத்து சென்றனர். மக்கள் கூறுகையில், ' இப்பகுதியில் அடிக்கடி வந்து, வீடுகளில் கதவுகளை உடைக்கும் கரடியால் அனைவரும் அச்சம் அடைந்துள்ளோம். எனவே, வனத்துறையினர் மீண்டும் கூண்டு வைத்து கரடியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.