குடியிருப்பு பகுதிகளில் சுற்றிதிரியும் காட்டுப்பன்றிகளால் அச்சம்
கோத்தகிரி; கோத்தகிரி ஒன்னைலை சுற்றுவட்டார குடியிருப்புகளில், காட்டு பன்றிகள் சுற்றி திரிவதாக, மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு, காட்டேஜ்கள், விடுதிகள் என, கான்கிரீட் காடுகளாக மாறிவரும் நிலையில், வன விலங்குகளின் இருப்பிடம், மாறி வருகிறது. உணவு, தண்ணீர் தேவைகளுக்காக வனவிலங்குகள், குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, காட்டுப்பன்றிகள் கூட்டமாக குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிவதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, கோத்தகிரி வாட்டர் பால்ஸ் பகுதியில் காட்டுப்பன்றி தாக்கி, பெண் கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால், வீட்டு வாசல்களில், குழந்தைகளை தனியாக விட்டுச் செல்லவும், விளையாடவும் கூடுமானவரை பெற்றோர் தவிர்த்து வருகின்றனர். எனவே, காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.