ஆர்மி பப்ளிக் பள்ளி வளாகத்தில் முகாமிட்ட காட்டெருமைகளால் அச்சம்
குன்னுார்; குன்னுார் பள்ளி வளாகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டெருமை கூட்டத்தால் பள்ளி மாணவ, மாணவியர் அச்சமடைந்தனர். நீலகிரி மாவட்டம், குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உணவு தேடி வனப்பகுதிகளில் இருந்து வெளிவரும் காட்டெருமைகள் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் உலா வருகின்றன. இந்நிலையில், நேற்று காலை, 20க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் குட்டிகளுடன், ஜூப்ளி கார்டன் அருகே உள்ள ஆர்மி பப்ளிக்பள்ளி வளாகம், ராணுவ குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தன. இதனால், பள்ளி மாணவ, மாணவியர், குடியிருப்புவாசிகள் அச்சமடைந்தனர். தொடர்ந்து. அங்குள்ள காவலர்கள் இரண்டு மணிநேரம் போராடி விரட்டினர். தொடர்ந்து, சாலையில் வந்து நீண்ட நேரம் நின்றிருந்த காட்டெருமைகள் வனப்பகுதிக்குள் சென்றன. மக்கள் கூறுகையில், 'வனத்துறையினர் இப்பகுதியை கண்காணித்து, காட்டெருமைகள் பள்ளி வளாகத்துக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். குன்னுார் வனச்சரகர் ரவீந்திரநாத் கூறுகையில்,''பள்ளி உட்பட பல பகுதிகளுக்கு காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வரும் போது, தகவல் தெரிவிக்க வேண்டும். ஆர்மி பப்ளிக் பள்ளியில் இருந்து தகவல் அளிக்கவில்லை. எனினும், அப்பகுதியில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.