ஊட்டியில் இரண்டாவது சீசனுக்கு மலர் நாற்று நடவு பணி துவக்கம்
ஊட்டி; ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசனுக்கு, 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு பணி துவங்கியது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசன் செப்., அக்., மாதங்களில் நடக்கிறது. கடந்த சில மாதங்களாக பூங்காவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இரண்டாவது சீசனுக்கு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். குறிப்பாக, வெளிநாட்டு சுற்றுலா பயணியர் இரண்டாவது சீசனுக்கு அதிக அளவில் வருகை தருவது வழக்கம். இங்கு வரும் சுற்றுலா பயணியரை மகிழ்விக்க, 5 லட்சம் மலர் நாற்றுக்கள் தயார் செய்ய பூங்கா நிர்வாகம் திட்டமிட்டது. இதற்கான மலர் செடிகள், 'கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப், புனே, பெங்களூரு,' உள்ளிட்ட இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டன. அதில், 'இன்கா மேரி கோல்டு, பிரெஞ்ச் மேரி கோல்டு, ஆஸ்டர், வெர்பினா, லுாபின், கேன்டிடப்ட், பெட்டூனியா,' உள்ளிட்ட அறுபது வகைகளில் பல்வேறு வகையான விதைகள் பெறப்பட்டு, 4 லட்சம் வண்ண மலர் செடிகள் தயார் செய்யப்பட்டன. நாற்று நடவு பணியை கலெக்டர் லட்சுமி பவ்யா நேற்று துவக்கி வைத்து நிருபர்களிடம் கூறுகையில்,''இரண்டாவது சீசனுக்கு ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியர் கண்டிப்பாக, இ--பாஸ் பதிவு செய்து வர வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள்; சிலிண்டர்களை சுற்றுலா பயணியர் எக்காரணம் கொண்டு எடுத்துவரக் கூடாது. தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து சுற்றுலா பயணியர் அறிந்து கொள்ளும் வகையில், எல்லையோர சோதனைச்சாவடிகளில் மலையாளம், கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது,''என்றார்.