தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை வனத்துறையினர் தீவிர விசாரணை
பந்தலுார் : பந்தலுார் அருகே புஞ்சைவயல் பகுதியில், தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்தது குறித்து, வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பந்தலுார் அருகே புஞ்சைவயல், ஒலிமடா பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை ஒன்று, காயங்களுடன் படுத்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, உதவி வன பாதுகாவலர்கள் கருப்பையா, அருள்மொழி வர்மன் மற்றும் வனச்சரவர்கள் ரவி, அய்யனார் ஆகியோர் தலைமையிலான வனக்குழுவினர், கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உடன் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, சிறுத்தை உயிரிழந்தது தெரிய வந்தது. உயிரிழந்த சிறுத்தையை அதே பகுதியில் வைத்து, பிரேத பரிசோதனை செய்து எரியூட்டப்பட்டது.வனத்துறையினர் கூறுகையில்,'உயிரிழந்தது, 6- வயது ஆண் சிறுத்தை, வேறொரு சிறுத்தையுடன் சண்டையிட்டதில் காயம் அடைந்து உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் மற்ற விபரங்கள் தெரிய வரும்,' என்றனர்.