மார்லிமந்து அணை பகுதியில் குப்பை கழிவுகள்; சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி
ஊட்டி: 'மார்லிமந்து அணை பகுதியில் உள்ள வனத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகள் குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும்,' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. இங்கு குடியிருப்புகள் மட்டுமின்றி ஓட்டல்கள், 700-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளது. நகரில் சேகரமாகும் குப்பைகளை துாய்மை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர்.பின், குப்பைகள் தீட்டுக்கல் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. அங்கு பிளாஸ்டிக் பொருட்கள் மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. மட்கும் குப்பைகளை உரமாக மாற்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பணியில் நகராட்சி நிரந்தர பணியாளர்கள், 70 பேரும், ஒப்பந்த ஊழியர்கள், 135 பேரும் ஈடுபட்டுள்ளனர். அணை அருகே குப்பைகள்
இந்நிலையில், ஊட்டி மார்லிமந்து அணையை ஒட்டி உள்ள வனப்பகுதியில் பல இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. மழை பெய்யும் சமயங்களில் இந்த குப்பைகள், ஊட்டிக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள மார்லிமந்து அணையில் கலக்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம், வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், நொண்டிமேடு பகுதியில் கொட்டப்பட்ட குப்பை கழிவுகளால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். நகராட்சி பகுதிகளில் அடுத்தடுத்து மலை போல் குப்பைகள் கொட்டப்படுவது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'ஊட்டி நகராட்சியில் குப்பை சேகரிக்கும் சில பணியாளர்கள் ஒரு சில பெரிய ஓட்டல்களில் குப்பைகளை எடுத்து, தனியாக ஆட்களை வைத்து குப்பை கிடங்குக்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் குப்பைகளை கொட்டியவர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். ஏனென்றால் பொதுமக்களால் ஒரே நேரத்தில் சென்று இவ்வளவு குப்பைகளை கொட்ட முடியாது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி, இதற்கு காரணமானவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்,' என்றனர்.