போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்பனை விசாரணையில் இறங்கிய அரசு அதிகாரிகள்
குன்னுார் : 'குன்னுார் இளித்தொரை கிராமத்தில், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, விவசாய நிலங்கள் விற்பனை செய்யப்படுகிறது,' என, குற்றம் சாட்டப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் நில உடமை மேம்பாட்டு திட்டம் அமல்படுத்தாததால், நில புலன்கள், உரிமையாளர் இல்லாமல் மூதாதையரின் பெயரிலேயே கூட்டு பட்டாவாக இருந்து வருகிறது. இதனால், நிலவுடமைகளை 'டிஜிட்டல்' மயமாக்குவது முழுமை பெறவில்லை. நீலகிரி மாவட்டத்தில் இத்திட்டம் செயல்படுத்துவதில் பல ஆண்டுகளாக சிக்கல் நீடிக்கிறது.இந்நிலையில், குன்னுார் இளித்தொரை கிராமத்தில் சிறு விவசாயிகளின் தேயிலை தோட்டங்களை போலி ஆவணங்கள் தயாரித்து சில நபர்கள் விற்பனை செய்ததாக, மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அனுப்பபட்டுள்ளது.இது குறித்து, சமூக ஆர்வலர் விஸ்வநாதன் கூறுகையில், ''இளித்தொரை கிராமத்தில் சில புரோக்கர்கள் மூலம், சில வருவாய் துறையினரின் உடந்தையுடன், போலி ஆவணங்கள் தயாரித்து சென்னையில் உள்ள சில நபர்களுக்கு, விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, மாவட்ட கலெக்டரின் தலைமையில் நடத்திய விசாரணையில், போலி ஆவணங்கள் உண்மை எனவும்; சில நில உரிமை சான்றிதழ்களை நிலத்தை விற்றவர்கள் திருத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனை சில அதிகாரிகள் ஒப்பு கொண்டுள்ளனர். எனினும், நிலத்தை வாங்கியவர்கள் இப்பகுதியில், தற்போது சாலை அமைத்து கட்டடங்கள் கட்ட ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். எனவே, போலி ஆவணங்களை ரத்து செய்து, விவசாயிகளின் நிலங்களையும், வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்துள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்,'' என்றார்.கூடுதல் கலெக்டர் சங்கீதா கூறுகையில்,'' இது குறித்த விசாரணை துவங்கப்பட்டுள்ளது. இரு தரப்பினரிடமும் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.