ஆபத்தான மரங்களை வெட்ட அனுமதி அளித்தும் பயன் இல்லை
பந்தலுார்: பந்தலுார் அருகே ஆபத்தான மரங்களை, வெட்டி அகற்ற அனுமதி அளித்தும் நடவடிக்கை இல்லாததால் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்டுவதாக கூறி, நல்ல நிலையில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு, கேரளா மற்றும் தமிழகத்தின் சமவெளி பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், தமிழக - கேரளா எல்லை பகுதியான, பந்தலுார் அருகே முள்ளன்வயல் - அயனிபிறா சாலையில், நுாற்றாண்டு பழமை வாய்ந்த காட்டு மரம் மற்றும் வென் தேக்கு மரங்கள் விழும் நிலையில் உள்ளது. அதில், காட்டுமரத்தின் அடிபாகம் முழுவதும் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனை ஒட்டி மின்கம்பிகள் மற்றும் சாலை, குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில், காற்றில் மரம் அடியோடு பெயர்ந்து விழுந்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும். மரத்தை வெட்டி அகற்ற பொதுமக்கள் வலியுறுத்திய நிலையில், கூடலுார் ஆர்.டி.ஓ., நேரடி ஆய்வு செய்து, கடந்த ஜன., மாதம், மரங்களின் பெரிய கிளைகளை வெட்டி அகற்ற அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால், இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படாத நிலையில், மரம் அடியோடு பெயர்ந்து விழுந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிப்புகள் ஏற்படும் முன்னர், ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.