| ADDED : ஜன 09, 2024 10:13 PM
குன்னுார்;குன்னுாரில் தொடரும் கன மழையை தொடர்ந்து மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.குன்னுாரில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடும் பனிமூட்டம் நிலவுகிறது. கடந்த, 2 நாட்களாக பனிமூட்டத்துடன் கன மழையும் பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக குன்னுாரில். 41 மி. மீ., மழை அளவு பதிவானது. தொடர்ந்து, கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் இரவு குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில் காந்திபுரம், பர்லியார் பகுதிகளில் மரங்கள் விழுந்தன. தீயணைப்பு துறையினர் மரங்களை வெட்டி அகற்றி சீரமைத்தனர். 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நேற்று காலை ஓட்டுபட்டறை, மவுன்ட் பிளசன்ட், மேலுார் சாலைகளில் மரம் விழுந்தது. 'ஆப்பிள்-பீ' பகுதியில் வீட்டின் மீது மரம் விழுந்ததில் வீடு சேதமானது. லோயர் குரூஸ் பெட், கன்னிமாரியம்மன் கோவில் தெரு பகுதிகளில் வீடுகள் பகுதி இடிந்தது. வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர். பஸ் மீது விழுந்த பாறை
கோவையில் இருந்து, கூடலுார் நோக்கி நேற்று காலை அரசு பஸ் வந்து கொண்டிருந்த போது பஸ்சின் முன்பகுதியில் பாறை விழுந்ததால் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக பஸ் கவிழாமல் இருந்ததால் பயணிகள் உயிர் தப்பினர். பஸ் பயணிகள் குன்னுாரில் இருந்து மாற்றி வேறு பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.குன்னுார் பணிமனைக்கு அரசு பஸ் கொண்டு செல்லப்பட்டது. நெடுஞ்சாலை துறை பொக்லைனில் பாறையைஅகற்றினர். மண்சரிவுகள் சீரமைக்கப்பட்டது. மலை பாதையில் கடும் மேகமூட்டம் மழையும் நீடிப்பதால் வாகனங்கள் இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை துறை மெத்தனம்
குன்னுார்- - மேட்டுப்பாளையம் சாலையில் பல இடங்களிலும் பாறைகள் அந்தரத்தில் தொங்கி காணப்படுகிறது. மேலும், மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இவற்றை அகற்ற உரிய திட்டம் வகுத்து அகற்ற வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். எனினும் நெடுஞ்சாலை துறைஅதற்கான நடவடிக்கைகள் எடுக்காமல் உள்ளது. இதனால், மழையின் போது, பாறைகள் வாகனங்கள் மீது விழும் அபாயம் உள்ளது.