கனமழையால் 30 ஏக்கரில் விவசாய பயிர்கள் சேதம்
குன்னுார்,; குன்னுார் கேத்தி அருகே விவசாய நிலங்களில் மழை வெள்ளம் புகுந்து, 30 ஏக்கருக்கு மலை, காய்கறி பயிர்கள் சேதமாகின.நீலகிரி மாவட்டம், குன்னுார் பகுதிகளில், கடந்த, 3 நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் கனமழையால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. மழையின் காரணமாக, முட்டிநாடு, கோலணிமட்டம், செலவிப் நகர், ஈஸ்வரன் நகர் போன்ற பகுதிகளில் உள்ள நீரோடையில், வெள்ளப்பெருக்கு எடுத்து, விவசாய விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. அதில், 30 ஏக்கர் பரப்பளவில், கேரட், பீட்ரூட், பூண்டு போன்ற மலை காய்கறி பயிர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு, லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி, விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'இப்பகுதிகளில் ஆற்றின் குறுக்கே பாலங்கள் அமைத்துள்ளதுடன், வருவாய் துறையினர் ஆதரவுடன் பல ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், இதுபோன்ற பாதிப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது,' என்றனர்.