உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் பெய்த கனமழையால் பசுந்தேயிலை கொள்முதல் அதிகரிப்பு! இலைக்கான விலையும் உயர்ந்ததால் பெரும் பயன்

நீலகிரியில் பெய்த கனமழையால் பசுந்தேயிலை கொள்முதல் அதிகரிப்பு! இலைக்கான விலையும் உயர்ந்ததால் பெரும் பயன்

ஊட்டி; நீலகிரியில் பெய்த தொடர் மழையால் தேயிலை தோட்டங்களில், பசுந்தேயிலை மகசூல் அதிகரித்து, தொழிற்சாலைகளில் கொள்முதல் இரு மடங்காக உயர்ந்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில், 60 ஆயிரம் ஏக்கரில் தேயிலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் கடந்த ஒரு மாதமாக கோடை மழை அதிகரித்தது. இதனால், தற்போது தேயிலை தோட்டங்களில் நல்ல ஈரப்பதம் ஏற்பட்டதுடன், பகல் நேரங்களில் தென்பட்ட வெயிலால் தேயிலை செடிகள் துளிர்விட்டுள்ளன. கடந்த சில நாட்களாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், தோட்டங்களில் இலை பறிக்கும் பணியில் சிறு விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால், மாவட்டத்தில் உள்ள, தனியார் மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் கொள்முதல் அதிகரித்து வருகிறது.

மூன்று 'ஷிப்ட்' பணி

மாவட்டம் முழுவதும், 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த மாதம் இறுதி வரை அதிகபட்சம் நாள் ஒன்றுக்கு, 10 ஆயிரம் கிலோ கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. கடந்த இரு நாட்களாக, 20 ஆயிரம் கிலோ வரை கொள்முதல் அதிகரித்துள்ளது. தேயிலை துாள் உற்பத்தி மூன்று ஷிப்ட் அடிப்படையில் நடந்து வருகிறது. தோட்டங்களில் நல்ல ஈரப்பதம் இருப்பதால் உரமிட்டு பராமரிக்க விவசாயிகள் ஆயத்தமாகியுள்ளனர். 'இதற்கு தகுந்தாற் போல், கூட்டுறவு நிறுவனங்களும், விவசாயிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை விரைவாக செயல்படுத்த வேண்டும்; தேயிலை வாரியம் அறிவித்த விலையை வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.சிறு விவசாயிகள் கூறுகையில்,'நடப்பாண்டில் கோடை மழை எதிர்பார்த்த அளவை விட, அதிகரித்து பெய்துள்ளது. தேயிலை தோட்டங்களுக்கான ஏற்ற சீதோஷ்ண நிலை ஏற்பட்டிருப்பதால் உரமிட்டு பராமரிக்க தயாராகி உள்ளோம். கூட்டுறவு தொழிற்சாலை நிர்வாகம், என்.சி.எம்.எஸ்., நிர்வாகம் விவசாயிகளுக்கு தேவையான உரத்தை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும்.,' என்றனர்.

நடவடிக்கை எடுக்குமா வாரியம்?

குன்னுார்: சிறு, குறு தேயிலை விவசாயிகள், சங்க நிறுவன தலைவர் சுப்ரமணியம் கூறியதாவது:தேயிலை வாரியம் அறிவித்த மாதாந்திர விலையை விட குறைவான விலையை செலுத்தும் கூட்டுறவு தொழிற்சாலைகளை கண்காணிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.மத்திய, மாநில அரசுகளிடம் பல முறையீடுகள் செய்ததுடன்,சிறு தேயிலை விவசாயிகள் போராட்டங்கள் நடத்திய பிறகு, 'இன்கோ' தொழிற்சாலைகள் கடந்த ஆறு மாத காலமாக தேயிலை வாரியம் நிர்ணயம் செய்த விலையை வழங்கின. ஆனால், கடந்த ஏப்., மாதத்திற்கு பிறகு, பல தொழிற்சாலைகள் மீண்டும் குறைந்த விலையை வழங்க துவங்கியுள்ளன.இந்த தொழிற்சாலைகள் மீது, தேயிலை வாரிய நிர்வாக இயக்குனர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, வாரியத்தால் அறிவிக்கப்பட்ட மாதாந்திர சராசரி விலை வழங்குவதை உறுதி செய்யவும் வேண்டும். இது தொடர்பாக தேயிலை வாரிய செயல் இயக்குனருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ