உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விடிய விடிய கொட்டி தீர்க்கும் கனமழை; மண் சரிந்து மரங்கள் விழுவதால் பாதிப்பு

விடிய விடிய கொட்டி தீர்க்கும் கனமழை; மண் சரிந்து மரங்கள் விழுவதால் பாதிப்பு

குன்னூர்: குன்னூரில் வெளுத்து வாங்கும் கனமழையால் தொடர்ந்து மரங்கள் விழுவதுடன், மண் சரிவு ஏற்பட்டு வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூரில் கடந்த 6 நாட்களாக இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை பாதையில், 6 இடங்களில் மரங்கள் விழுந்ததுடன், சின்ன குரும்பாடி, காட்டேரி, நந்தகோபால் பாலம், உள்ளிட்ட பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. நந்தகோபால் பாலம் அருகே ராட்சத பாறை உருண்டு சாலையில் விழுந்தது. அடார், ஐ.டி.ஐ. வண்டிச்சோலை உள்ளிட்ட 7 இடங்களில் மரங்கள் விழுந்தன. காந்திபுரம், இந்திரா நகர் பகுதிகளில் மூன்று வீடுகளில், சுவற்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்தன. சில வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பொருட்கள் நாசமாகின. பால்கார லைனில் பாறைகள் அந்தரத்தில் நிற்பதால் வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. சீரமைப்பு மற்றும் மீட்பு பணிகளில், தீயணைப்பு, நெடுஞ்சாலை, வருவாய் துறையினர், போலீசார், தமிழக பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். சின்ன குரும்பாடி அருகே ஏற்பட்ட மண் சரிவு சீரமைக்கப்பட்ட போதும், சேறு நிறைந்து இருந்ததால், வாகனங்களை இயக்க சிரமம் ஏற்பட்டது. பேரிடர் அபாயமுள்ள மேல் பாரத் நகர் உட்பட பேரிடர் அபாயம் உள்ள இடங்களில் குன்னூர் ஆர்.டி.ஓ., (பொ) டினு அரவிந்த் தலைமையில் தமிழக பேரிடர் மீட்புக் குழுவினர், வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். பாதிப்பு ஏற்படும் நேரத்தில், மக்களை முகாம்களில் தங்க வைக்க சமுதாயக்கூடங்கள், பள்ளிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இரவில் மட்டும் இடியுடன், கொட்டி தீர்க்கும் கனமழையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். குன்னூரில் அதிக மழை நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக, குன்னூரில் 10.2 செ.மீ., பர்லியாரில் 8.8 செ.மீ., கீழ் கோத்தகிரியில் 8.4 செ.மீ., குன்னூர் புறநகரில் 7.3 செ.மீ., கோடநாட்டில் 6 செ.மீ. எடப்பள்ளியில் 5.6 செ.மீ., கிண்ணக்கொரையில் 4.8 செ.மீ., கோத்தகிரியில் 4.4 செ.மீ., மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை