உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / திட்டங்களை எளிதில் பெற தோட்டக்கலை துறை அழைப்பு; தக்க ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் பயன்கள் ஏராளம்

திட்டங்களை எளிதில் பெற தோட்டக்கலை துறை அழைப்பு; தக்க ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் பயன்கள் ஏராளம்

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி அதிகளவில் பயிரிடப்படுகிறது. தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்காததால் தேயிலை தோட்டங்கள் நடுவே ஊடுபயிராக மலை காய்கறி விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இம்மாவட்டத்தை பொறுத்தவரை, ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா பகுதிகளில் தேயிலை, மலை காய்கறிகள் பயிரிடுகின்றனர்.கூடலுார், பந்தலுார் பகுதிகளில் தேயிலை விவசாயம் மேற்கொண்டாலும், வாழை, குறு மிளகு உள்ளிட்ட விவசாய பயிர்கள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், மலை மாவட்டத்தின் விவசாயத்திற்கு ஏற்றவாறு, மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களின் கீழ், மானிய உதவியுடன் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விவசாயிகள் பதிவேடு செயலி

இந்நிலையில்,மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் நில உடமைகளை உள்ளடக்கிய விவசாயிகளின் தரவுகளை சேகரிப்பதற்காக, பிரத்யேகமான விவசாயிகள் பதிவேடு செயலிகளை உருவாக்கியுள்ளது. இச்செயலியில், விவசாயிகளின் நில உடமைகளை சரிபார்த்து, ஆதார் எண்ணை போன்று, விவசாயிகளுக்கென தனித்துவமான அடையாள எண் வழங்கும் சிறப்பு முகாம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களில் நடத்தப்படுகிறது. பொது சேவை மையங்களிலும் விவசாயிகள் தங்களது நில உடமைகளை இலவசமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எளிதில் திட்டங்களை பெறலாம்

இதன் மூலம் விவசாயிகள் தங்கள் அருகில் உள்ள பொது, இ--சேவை மையத்தை பயன்படுத்தி தங்களுடைய, பட்டா, ஆதார் அட்டை, மொபைல் எண் ஆகியவை கொண்டு சென்று பதிவு செய்யலாம். இனி வரும் காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களின் பயன்களை ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பெறலாம். மேலும், விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தும், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை, வேளாண் வணிகம், கால்நடை பராமரிப்பு, வேளாண்மை பொறியியல் போன்ற பல்வேறு விவசாயம் சார்ந்த துறைகளின் திட்டங்களை எளிதில் பெறலாம். மேற்கண்ட திட்டங்களை பெறுவதற்கு ஒவ்வொரு முறையும் விண்ணப்பித்து ஆவணங்களை சரிபார்க்க வேண்டிய அவசிய மில்லை. தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் சிபிலா மேரி கூறுகையில், ''நீலகிரியில், 82,495 விவசாயிகள் உள்ளனர். பிரதமரின் கவுரவ உதவி திட்டத்தின் கீழ், 51,105 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். அதில், விவசாயிகள் பதிவேடு திட்டத்தில் இதுவரை, 11,546 விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பெறுவதற்காக பதிவு செய்துள்ளனர்.பதிவு செய்யாத விவசாயிகள் தங்களுடைய கணினி பட்டா எண், ஆதார் எண், மொபைல் எண் ஆகியவற்றுடன் அருகில் உள்ள பொது சேவை மையத்தில் இம்மாதம், 31ம் தேதிக்குள் இலவசமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இதனால், பல்வேறு பயன்களை எளிதாக பெற முடியும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை