ஊட்டி;'சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல்களின் உண்மை தன்மை அறியாமல் பிற குழுக்களுக்கு பகிர வேண்டாம்,' என, போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் மற்றும் 'வாட்ஸ் அப்' களில் பகிரப்படும் தகவல்களை, பொதுமக்கள் உண்மை தன்மை அறியாமல் பகிர்வதால் பல்வேறு சமூக விரோத செயல்கள் ஏற்பட்டு வருகிறது. தாக்குதல் சம்பவங்கள் நடக்கின்றன. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, சமூக வலைத்தளங்கள், 'வாட்ஸ் அப்' களில் பகிரப்படும் தகவல்களில் உண்மை தன்மை அறியாமல் எக்காரணத்தை கொண்டும் பிற குழுவிற்கு பகிர வேண்டாம். அது குறித்தான தகவல் அல்லது புகார் தெரிவிக்க அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரடியாக செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
நீலகிரி மாவட்டத்தில் சமூக வலைத்தளங்கள் மற்றும் 'வாட்ஸ்-அப்' களில் பகிரப்படும் தகவல்களால் ஏற்படும் குற்ற செயல்களை தடுக்க போலீசார் தற்போது விழிப்பணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இம்மாவட்டத்தில், 12 ஆயிரம் வெளி மாநில தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீசார் நகர் மற்றும் ரூரல் பகுதிகளில் இரவு ரோந்து பணியை பலப்படுத்தியுள்ளனர். அவர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து, ஊட்டியில் எஸ்.பி.,சுந்தரவடிவேல் நிருபர்களிடம் கூறியதாவது:சமூக வலைத்தளத்தில் வரும் தகவல்கள் சரியானவையா அல்லது தவறானவையா என்பதை அறியாமல், பொதுமக்கள் மீண்டும் பகிர்வதால் சிலர் சட்டத்தை கையில் எடுத்து கொண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். இதில், சம்மந்தப்படாத நபர்களை தாக்கும் சம்பவங்கள் நடந்துள்ளது. இதை தடுக்கும் நோக்கில், போலீசார் சார்பில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு, தவறு செய்பவர்களுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.மேலும், மக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல்கள் உண்மையா என்பதை உணர்ந்து அறிந்து மற்றவர்களுக்கு பகிர வேண்டும். வலைத்தளங்கள் மூலமாக சமூக பிரச்னைகளை ஏற்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக, இளைஞர்கள்; மாணவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
புகார் தெரிவிக்கலாம்...
சமூக வலைத்தளங்கள் மற்றும் 'வாட்ஸ் அப்' மூலம் பகிரப்படும் தகவல்களில் உண்மை தன்மை அறியவும், அது குறித்தான தகவல்களை அறியவும், புகார் தெரிவிக்க, 9789800100 என்ற மொபைல் எண்ணில், 24 மணி நேரம் தொடர்பு கொள்ளலாம்.