கூடலுார்: கூடலுார் கோட்டத்தில் வனவிலங்குகள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய காபிக்காடு வனப்பகுதியில், கசிவு நீர் குட்டை அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கூடலுார் வனக்கோட்டத்தில், கோடைகால வறட்சியின் போது வனப்பகுதிகளில் உணவு, குடிநீர் கிடைக்காமல் குடியிருப்புக்குள் நோக்கி யானை, கரடி உட்பட வன விலங்குகள் வருவதால், மனித -விலங்கு மோதல் ஏற்படுகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வனவிலங்குகள் குடியிருப்புக்குள் நுழையும் போது, அதை கண்டறிந்து அதனை எல்லையில் தடுத்து நிறுத்தி விரட்டும் வகையில், 6 கோடி ரூபாய் செலவில், செயற்கை நுண்ணறிவு திட்டத்தின் கீழ் செயல்படும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ரூ. 13.5 லட்சத்தில் பணி இந்நிலையில், அடுத்த சில மாதங்கள் தீவிரமடைய உள்ள கோடை காலத்தில் வனவிலங்குகளின் குடிநீர் தேவை வனப்பகுதியில் பூர்த்தி செய்யும் வகையில், முதல் கட்டமாக, புளியாம்பாறை அருகே, 13.5 ஐந்து லட்சம் ரூபாய் செலவில் காபிக்காடு வனத்தை ஒட்டிய நீரோடையில், 60 மீட்டர் அகலம்; 62 மீட்டர் நீளத்தில் நீர்க்கசிவு குட்டை அமைக்கும் பணியை வனத்துறையினர் துவக்கி உள்ளனர். இந்த பணிகளை அடுத்த சில வாரங்களுக்குள் முடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பணிகள் சரியான நேரத்தில் முடியும் பட்சத்தில் கோடை மழை பெய்தால் பெரும் பயன் கிடைக்க வாய்ப்புள்ளது. வனத்துறையினர் கூறுகையில், 'இப்பகுதியில், கசிவு நீர் குட்டை அமைப்பதன் மூலம் வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். நிலத்தடி நீர் உயரும், வனப்பகுதியும் பசுமையாக மாற வாய்ப்புள்ளது. இதனால், வன விலங்குகளின் உணவு தேவை பூர்த்தியாகும்,' என்றனர். வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இதுபோன்று நீர் குட்டைகள் அமைப்பது வரவேற்க கூடியது. இது போன்ற, வாய்ப்புள்ள பந்தலுார், முதுமலை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கசிவு நீர் குட்டைகள அமைத்து, பராமரித்து வருவதுடன், வனப்பகுதிகளில் தாவர உண்ணிகள் விரும்பி உண்ணக்கூடிய தாவரங்கள் புற்களை வளர்க்க வேண்டும். இதன் மூலம், மனித -விலங்கு பிரச்னைக்கு தீர்வு கிடைக்க வாய்ப்புள் ளது,' என்றனர்.