முழுமை பெறாத தடுப்பு சுவர் பணி; பார்க்கிங் செய்வதில் சிக்கல்
கோத்தகிரி; கோத்தகிரி நகராட்சி அலுவலகத்தில் தடுப்பு சுவர் பணி பாதியில் விடப்பட்டுள்ளதால், வாகனங்கள் 'பார்க்கிங்' செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கோத்தகிரி பேரூராட்சி, சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகரில், மக்கள் தொகையுடன், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. போதிய பார்க்கிங் வசதி இல்லாததால், சாலையில் வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த மழையில், நகராட்சி அலுவலகம் முன்பு, மண் சரிவு ஏற்பட்டது. நீண்ட நாட்கள் கழித்து, அலுவலக கட்டடம் பாதிக்காத வகையில், தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. ஆனால், பணி நிறைவு பெறாமல், பாதியில் விடப்பட்டுள்ளது. இதனால், அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக வரும் பொது மக்களின் வாகனங்கள் சாலையில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, பாதியில் விடுபட்ட தடுப்பு சுவர் அமைக்கும் பணியை நிறைவு செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.