பேரூராட்சிகளில் தொழில் உரிம கட்டணம் உயர்வு; மறுபரிசீலனைக்கு எதிர்பார்ப்பு
குன்னுார்; 'நகராட்சிக்கு இணையாக பேரூராட்சிகளின் தொழில் உரிம கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில், 4 நகராட்சிகள்; 11 பேரூராட்சிகள் உள்ளன. அதில், பழங்குடியினர் மக்கள் உட்பட ஏழை, எளிய மக்கள் வசிக்கும் கிராமங்கள் பெரும்பாலும் பேரூராட்சிகளில் இணைக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் உள்ள தேயிலை எஸ்டேட்களின் வருமானத்தை கணக்கில் எடுத்து, பேரூராட்சிகளாக செயல்படுகிறது. ஊராட்சிகளாக இருக்க வேண்டிய கிராமங்கள் பேரூராட்சியாக இருந்தும், 50 ஆண்டுகளாக மக்களின் வாழ்க்கை தரம் உயராமல் உள்ளது. ஊராட்சியாக மாற்ற வேண்டும்
இதனால், பேரூராட்சிகளை ஊராட்சியாக மாற்றி அரசின் திட்டங்கள் செயல்படுத்த தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டில் இருந்து, பேரூராட்சிகளின், தொழில் உரிம கட்டண வசூல் தொடர்பான அறிவிப்பு அனைத்து மண்டலங்களில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குனர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இதன்படி, பேரூராட்சிகளின் எல்லைக்கு உட்பட்ட தொழில் நிறுவனங்கள், கடைகள், வணிக கட்டடங்கள் மற்றும் பொது உபயோக கட்டடங்கள் ஆகியவற்றிற்கான தொழில் உரிம கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.அதில், குறு நிறுவனங்களுக்கு, 750 முதல் 2,000 ரூபாய்; சிறு நிறுவனங்களுக்கு, 2 ஆயிரம் முதல் 3,500 ரூபாய்; நடுத்தர நிறுவனங்களுக்கு, 5,000 முதல் 8,000 ரூபாய்; இதர நிறுவனங்களுக்கு, 7,500 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.மாவட்ட உள்ளாட்சி மீட்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில், ''குன்னுார் நகராட்சி கடைக்கும், பேரூராட்சிக்கும் ஒரே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.நகர, குக்கிராம கடைகளுக்கு ஒரே மாதிரியான வரிவிதிப்பது அநீதியாகும். இது மட்டுமல்லாமல் குப்பை கட்டணம் என, 600 ரூபாய் தனியாக வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு, 2600 ரூபாய் செலுத்திய தொழில் உரிம கட்டணம் தற்போது, 5000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. வியாபாரிகள், சிறு, குறு தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,'' என்றார்.