| ADDED : பிப் 04, 2024 10:21 PM
கோத்தகிரி:'மாணவர்கள் அடிப்படை அறிவியல் அறிவை, கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டது.கோத்தகிரி கன்னேரிமுக்கு அரசு உயர்நிலைப்பள்ளியில், அறிவியல் கருத்தரங்கு நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் அரவிந்தன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:ஒரு நாட்டின் வளம், மக்களின் அறிவியல் தொழில் நுட்ப அறிவால் நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் சீனா, தென்கொரியா போன்ற நாடுகள் முன்னணி வகிக்கும் நிலையில், இந்திய மக்களின் அறிவியல் எழுத்தறிவு விகிதம் வெறும், இரண்டரை சதவீதமாக இருப்பது வருந்தத்தக்கது. போபாலில், 30 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விஷவாயு விபத்தில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பார்வை இழந்தனர். 'ஒரு ஈரத்துணியை முகத்தில் மூடிக்கொண்டால், விஷ வாயுவின் தாக்கத்தில் இருந்து, எளிதாக தப்பிக்கலாம்,' என்ற அடிப்படை அறிவியல் அறிவு இல்லாததால், நுாற்றுக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்றும் கூட, நாம் உண்ணும் துரித உணவு மற்றும் நொறுக்கு தீனிகளில், எத்தனை வகையான வேதிப்பொருட்கள் கலந்துள்ளன என்ற விழிப்புணர்வு இல்லாமல், மக்கள் பல நோய்களுக்கு ஆளாகின்றனர்.எனவே, அடிப்படை அறிவியல் அறிவு அனைவருக்கும் கட்டாயம் இருக்க வேண்டும். இதனை மாணவர்கள் பள்ளி பருவத்திலேயே கட்டாயமாக கற்று கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.பள்ளி வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சிவக்குமார் வரவேற்றார். ஆசிரியர் சுந்தர் நன்றி கூறினார்.