சீகூர், பொக்காபுரம் பகுதிகளில் உள்ள யானை வழித்தடத்தில் ஆய்வு! சீல் வைக்கப்பட்ட விடுதி கட்டடங்களுக்கு சிக்கல்
கூடலுார்: மசினகுடி, சீகூர் யானை வழித்தடத்தில், 'சீல்' வைக்கப்பட்ட விடுதி கட்டடங்கள் உள்ள பகுதிகளில், நீலகிரி மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.முதுமலை மசினகுடியை ஒட்டிய சீகூர் யானை வழித்தடத்தில் உள்ள கட்டடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற, 2009ல் வக்கீல் யானை ராஜேந்திரன், சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தொடர்ந்து, 2011ல் யானை வழித்தடத்தில் உள்ள அனுமதி இல்லாத சுற்றுலா விடுதிகள், ஆக்கிரமிப்புகள் அகற்ற கோர்ட் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து கட்டட உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 39 தனியார் விடுதிகளுக்கு 'சீல்'
வழக்கு தொடர்பான விசாரணையில், சென்னை ஐகோர்ட், உச்ச நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது. தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி, 2018, ஆக., மாதம் யானை வழித்தடங்களில் உள்ள, 39 தனியார் விடுதிகளில் உள்ள கட்டடங்களுக்கு மாவட்ட நிர்வாகம் 'சீல்' வைத்தது. இதை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில், 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டியிடம் விடுதி உரிமையாளர்கள்; உள்ளூர் மக்கள் தங்கள் இடம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கோரிக்கை விண்ணப்பங்களை அளித்தனர். இதன் அடிப்படையில், யானை வழித்தடங்களில் 'சீல்' வைக்கப்பட்ட கட்டடங்களை பலமுறை கமிட்டி ஆய்வு செய்தது. தொடர்ந்து, யானை வழித்தடங்களில் அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.தொடர்ந்து, கடந்த, ஆக., மாதம் சோலுார் பேரூராட்சி, மசினகுடி ஊராட்சி உட்பட நான்கு உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், யானை வழித்தடத்தில் உள்ள தனியார் விடுதி கட்டடங்களை காலி செய்யும்படி உரிமையாளருக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து சில உரிமையாளர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகி இருப்பதால், இடிக்கும் பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை.இந்நிலையில், யானை வழித்தடத்தில் 'சீல்' வைக்கப்பட்ட விடுதி கட்டடங்கள், ஆக்கிரமிப்பு இடங்களை, மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு செய்தார். ஊட்டி ஆர்.டி.ஓ., சதீஷ், ஊட்டி தாசில்தார் சங்கர் கணேஷ், சிங்கார வனச்சரகர் தனபால் ஆகியோர் உடனிருந்தனர். யானை வழித்தடத்தில் உள்ள விடுதிகளை, காலி செய்யும்படி, உள்ளாட்சி அமைப்பு மூலம் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில், அப்பகுதிகளில் கலெக்டர் ஆய்வு செய்திருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.அதிகாரிகள் கூறுகையில், 'யானை வழித்தட வழக்கு நடந்து வரும் நிலையில், 'சீல்' வைக்கப்பட்ட விடுதி கட்டடங்கள், அப்பகுதி நிலப்பரப்பு பகுதிகளை அறிந்து கொள்வதற்காக, கலெக்டர் ஆய்வு செய்தார். மற்ற விபரங்கள் குறித்து எங்களுக்கு தெரியாது,' என்றனர்.