பூமியை காப்பது சாமானிய மக்களின் கையில் உள்ளது: பள்ளியில் நடந்த பசுமை விழாவில் கருத்து
கோத்தகிரி ; கோத்தகிரி இட்டக்கல் மெட்ரிக் பள்ளியில் நடந்த பசுமை பாதுகாப்பு குழந்தைகள் தின விழாவில், பள்ளி முதல்வர் ஜெயராமன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் போஜராஜன் முன்னிலை வகித்தார். அதில், தமிழ்நாடு அறிவியல் இயக்க, மாவட்ட செயலாளர் ஆசிரியர் ராஜூ, சிறப்பு கருத்தாளராக பங்கேற்று பேசியதாவது:குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு, பச்சை காய்கறிகள், பழவகைகள் அதிமுக்கியம். இதனை பெற்றோர் கடைபிடிக்க வேண்டும். தற்போது, 'அசர் பைஜான்' மாநாட்டில் நடந்து வரும், 29வது சர்வதேச சுற்றுச்சூழல் மாநாட்டில், 2030ம் ஆண்டுக்குள் புவி வெப்பத்திற்கு காரணமான, கார்பனின் அளவை குறைப்பது குறித்து விவாதங்கள் நடந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான கார்பன் டை ஆக்சைடு வெளியீடு, உலக அளவில், 0.8 சதவீதம் உயரும் எனவும், இந்தியாவை பொருத்தமட்டில், கார்பன் வெளியீடு, கடந்த ஆண்டை விட, 4.6 சதவீதம் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.உலக அளவில், 'சீனா, 31, அமெரிக்க 13, இந்தியா, 8 மற்றும் ஐரோப்பிய நாடுகள், 7 சதவீதம் கார்பனை வெளியிடும்,' என, விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 'கார்பன் வெளியிட்டை பூஜ்ஜியம் சதவீதத்திற்கு கொண்டு வருவது; பூமியின் வெப்பத்தை, 1.5 டிகிரி செல்சியஸ்க்குள் நிலை நிறுத்துவது போன்ற, 16 குறியீடுகள் நிறை வேற்றப்படவேண்டும்,' என, ஐ.நா., சபை எதிர்பார்க்கிறது. பூமியை காப்பாற்றுவது, உலக தலைவர்களின் கையில் இல்லை. சாமானிய மனிதர்களின் கையில் தான் உள்ளது. இவ்வாறு, ராஜூ பேசினார்.