உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கல்லுாரியில் சேர முடியாமல் ஜார்க்கண்ட் மாணவி தவிப்பு

கல்லுாரியில் சேர முடியாமல் ஜார்க்கண்ட் மாணவி தவிப்பு

ஊட்டி: குன்னுார் அருகே எஸ்டேட்டில் பணிபுரியும் ஜார்க்கண்ட் மாநில பெண் தொழிலாளியின் மகள், பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும், 'பாரா மெடிக்கல்' கல்லுாரியில் சேர முடியாமல் தவித்து வருகிறார். நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே ஆடர்லி, அளக்கரை எஸ்டேட்டில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நிரூபா ஓரான் பணிபுரிகிறார். அவர் மகள் சஞ்ஜனா ஓரான். இவர், 1 முதல் 5ம் வகுப்பு வரை ஆரம்ப கல்வியை ஜார்க்கண்டில் படித்தார். நீலகிரிக்கு வந்த பின், 6 முதல் 8ம் வகுப்பு வரை கரன்சி பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் படித்தார். 9 முதல் பிளஸ் 2 வரை குன்னுார் புனித அந்தோணியார் மேல்நிலை பள்ளியில் படித்தார். பிளஸ் 2 தேர்வில், 74.5 சவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார். கோவையில், 'பாரா மெடிக்கல்' எனப்படும் துணை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளார். இடம் கிடைத்தும், நீலகிரியில் வசிப்பதற்கான இருப்பிட சான்று இல்லாததால், கல்லுாரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், சஞ்ஜனா ஓரான், தாய் நிரூபா ஓரானுடன், ஊட்டியில் கலெக்டர் லட்சுமி பவ்யாவிடம், தனக்கு இருப்பிட சான்று வழங்க கோரி மனு அளித்தார். மனுவில், 'என் தந்தை எங்களுடன் இல்லாத நிலையில், தாய் கூலி வேலை செய்து படிக்க வைக்கிறார். ஏழ்மை நிலையில் இருக்கும் எனக்கு மாவட்ட நிர்வாகம் இருப்பிட சான்று, கல்வி உதவித்தொகை தந்து உதவினால், துணை மருத்துவ படிப்பில் சேர்ந்து படிக்க முடியும்' என, கூறப்பட்டுள்ளது. அதிகாரிகள் கூறுகையில், 'அவர் படித்த பள்ளிகளின் சான்று, அவர் தாய் பணிபுரியும் எஸ்டேட் நிறுவனத்தின் சான்று பெற்று வந்தால், இருப்பிட சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

palaniappan. s
ஆக 26, 2025 09:51

தமிழ்நாட்டு பெண் இல்லை என்று தள்ளாமல் இந்த ஏழை மாணவிக்கு இருப்பிட சான்றளித்து படித்து முன்னேற உதவி செய்ய வேண்டும்.


முக்கிய வீடியோ