வேலை வாய்ப்பு முகாம்: 3,101 பேர் தேர்வு; அரசு கொறடா ராமச்சந்திரன் தகவல்
குன்னுார்; ''நீலகிரியில் இதுவரை நடந்த, 6 தனியார் வேலைவாய்ப்பு முகாம்களில், 3,101 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது,'' என, தெரிவிக்கப்பட்டது.குன்னுார் சி.எஸ்.ஐ., பொறியியல் கல்லுாரியில், மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு துறை மற்றும் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், தனியார்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி, அரசு கொறடா ராமச்சந்திரன் பேசுகையில், ''நம் மாநிலத்தில், தனியாரை மிஞ்சும் வகையில் மருத்துவமனைகள் சிறந்து விளங்குகின்றன. நாள்தோறும், 250 பேர் வந்த குன்னுார் அரசு மருத்துவமனையில், தற்போது, 700 நோயாளிகள் வருகின்றனர். 150 பேர் வந்த கோத்தகிரி மருத்துவமனையில், தற்போது, 500 பேர் வருகின்றனர்.படித்து வேலை இல்லாதவர்களுக்காக, நீலகிரியில் இதுவரை நடந்த, 6 வேலைவாய்ப்பு முகாம்களில், 550 நிறுவனங்களுடன், 13 ஆயிரத்து 847 பேர் பங்கேற்றனர். அதில், 3,101 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது,'' என்றார். மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா மாவட்ட செயல்திட்டங்கள் குறித்து பேசினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாகுல் ஹமீது வரவேற்றார். மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் காசிநாதன் நன்றி கூறினார்.