உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புதிய குடிநீர் தொட்டி கட்டுவதாக கூறி பழையதற்கு சுண்ணாம்பு பூசும் பணி; எதிர்ப்பு தெரிவித்த கம்பி சோலை மக்கள்

புதிய குடிநீர் தொட்டி கட்டுவதாக கூறி பழையதற்கு சுண்ணாம்பு பூசும் பணி; எதிர்ப்பு தெரிவித்த கம்பி சோலை மக்கள்

குன்னுார்; ஜெகதளா பேரூராட்சி, கம்பிசோலையில், புதிய குடிநீர் தொட்டி அமைப்பதாக கூறிய நிலையில், பழைய தொட்டிக்கு சுண்ணாம்பு பூசி சென்றது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.குன்னுார் அருகே ஜெகதளா பேரூராட்சி, 2வது வார்டு கம்பிசோலை பகுதியில் புதிதாக குடிநீர் தொட்டி அமைக்க வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், 4 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, டெண்டர் விடப்பட்டதாக கூறி கம்பிச்சோலை காந்திநகர் அருகே, பழைய குடிநீர் தொட்டி ஒன்று இடிக்கப்பட்டது. அதே சமயம், கீழ்பகுதியில் குடியிருப்பு அருகே உள்ள குடிநீர் தொட்டிக்கு பெயரளவிற்கு சிமெண்ட் பூசி, சுண்ணாம்பு பூசப்பட்டது. இதுகுறித்து, பணி நடந்த பகுதிக்கு வந்த மக்கள், ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது, 'பணியை தடுத்து நிறுத்தியதாக, புகார் கொடுப்பதாக, அவர் எச்சரிக்கை விடுத்ததால், மக்கள் கொந்தளிப்படைந்தனர். 'புதிய குடிநீர் தொட்டியை அமைக்கவும், பழைய தொட்டியை முழுமையாக சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடப்படும்,' என, தெரிவித்தனர்.ஊர் பிரமுகர் கோமதி கூறுகையில்,''பலமுறை பஞ்சாயத்து அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பழைய தொட்டியின் அடிப்பகுதியில் நீர் கசிகிறது. இதனை சுற்றி சிமென்ட் தளம் அமைக்காமலும், சுத்தம் செய்யாலும் சுண்ணாம்பு அடிக்கப்பட்டு விட்டது. இங்கு திட்டப்படி புதிதாக குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை