உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நெடுஞ்சாலை பணிக்கு போதிய நிதி ஒதுக்காததால் சீரமைப்பில் தொய்வு! மூன்று மாநில சாலையில் பயணிகளுக்கு பாதிப்பு

நெடுஞ்சாலை பணிக்கு போதிய நிதி ஒதுக்காததால் சீரமைப்பில் தொய்வு! மூன்று மாநில சாலையில் பயணிகளுக்கு பாதிப்பு

பந்தலுார் : பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் சேதமடைந்த நெடுஞ்சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்காத நிலையில் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழக எல்லை பகுதியாக பந்தலுார் தாலுகா உள்ளது. இந்த பகுதியில் உள்ளூர் மட்டுமின்றி, தமிழகம், கேரள, கர்நாடக மாநில வாகனங்கள் வந்து செல்கின்றன. இப்பகுதி வழியாக, தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும், நுழைவு வரி செலுத்தியும், இ--பாஸ் பெற்றும் வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு வந்து, செல்லும் பயணிகள் மனம் நொந்தபடி பயணிக்கும் அவலம் தொடர்கிறது.

குண்டும், குழியாக சாலைகள்

பந்தலுார் பஜார் மற்றும் அதனை ஒட்டிய சாலைகள் குழிகளாக மாறி, வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், நெடுஞ்சாலைத் துறையினர், 5-வது முறையாக பாறை துகள்கள் மற்றும் ஜல்லிக்கற்களை போட்டு பெயரளவிற்கு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.அதில், கூடலுாரில் இருந்து, தேவர்சோலை வழியாக, கேரளா மற்றும் கர்நாடகா செல்லும் மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் நெலாக்கோட்டை அருகே, சாலையின் தாழ்வான பகுதி சேதமடைந்து, வாகனங்கள் இயக்க முடியாத நிலையில் உள்ளது. அதிகளவு பயணிகளை ஏற்றி வரும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் இந்த சாலையில் பயணிக்க முடியாத நிலையில், அடிக்கடி பழுதடைந்து நிற்பது தொடர்கிறது. கூடலுார் மற்றும் அதனை சார்ந்த பகுதி மக்கள், மருத்துவ தேவைகளுக்கு கேரளா மாநிலம் செல்லும் நிலையில், சேதமடைந்த சாலையில் ஆம்புலன்ஸ் எளிதில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

போராட்டம் நடத்த முடிவு

இந்நிலையில் பொதுமக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்ததால், தற்காலிகமாக சேதமடைந்த பகுதியில் மீண்டும் பாறை துகளை கொட்டி சமன் செய்யும் பணி நடந்துள்ளது. எனினும், இப்பகுதியில் வெயிலான காலநிலையில் எழும் துாசு படலத்தால், மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். பல முறை கூறியும் தார் சாலை இதுவரை போடவில்லை.நெலாக்கோட்டை பகுதி சமூக ஆர்வலர்கள் மோகன், உஸ்மான் ஆகியோர் கூறுகையில்,''இந்த பகுதியில் சேதமடைந்த சாலைகளை முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கா விட்டால் வரும், 20ம் தேதி, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொது நல அமைப்புகளை ஒன்றிணைத்து நெடுஞ்சாலைத்துறைக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்,'' என்றனர்.நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சுப்ரமணி கூறுகையில், ''கூடலுார், பந்தலுார் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகளுக்காக, துறை சார்ந்த நிதி இதுவரை வராமல் இருந்தது. அதனால், தான் சேதமடைந்த சாலைகளை முழுமையாக சீரமைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தோம். ஏற்கனவே உள்ள நிதி ஆதாரத்தை வைத்து தற்காலிக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டோம். தற்போது சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் சாலை சீரமைப்பு பணி துவங்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ