ஆமை வேக பணியால் வாகன ஓட்டிகள் அவதி
ஊட்டி: 'ஊட்டி அருகே, ஆடசோலை - தேனாடுகம்பை இடையே நடந்து வரும் சாலை விரிவாக்க பணியை விரைவாக முடிக்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஊட்டியிலிருந்து ஆடசோலை, தேனாடுகம்பை வழியாக அணிக்கொரை, எப்பநாடு, கடநாடு, பெந்தட்டி, சின்ன குன்னுார், தொரைஹட்டி, கெங்கமுடி, துானேரி உள்ளிட்ட சுற்றுவட்டார மக்கள் அத்தியாவசிய தேவைக்கு ஊட்டிக்கு வர இச்சாலையை பயன்படுத்துகின்றனர். அரசு பஸ், தனியார் வாகனங்கள் இச்சாலையில் அதிகளவில் சென்று வருகின்றன. நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்கப்பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. பணிக்காக சாலையின் ஒருப்புறம் கயிற்றால் கட்டி தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால், எதிரே வரும் வாகனங்கள் வழிவிட்டு செல்ல முடியாமல் பின்னோக்கி நகர்த்தி இடம் கொடுத்து செல்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவ்வப்போது நடக்கும் பணியின் போது, அரசு பஸ்கள் நிற்பதால் அரசு, தனியார் துறை ஊழியர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு பணிக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். வாகன ஓட்டிகள் கூறுகையில்,'சாலை விரிவாக்க பணி 'ஆமை' வேகத்தில் நடந்து வருவதால், வாகனங்கள் அடிக்கடி ஸ்தம்பித்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மக்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு மேற்கொண்டு பணியை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.