சேறான கோலணிமட்டம் சாலை வாகன ஓட்டிகள் அவதி
குன்னுார்: கோலணிமட்டம் சாலையில், உரக் கழிவுகளுடன், சேறு சகதி நிரம்பி வழிந்தோடுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். குன்னுார் அருகே அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கோலணி மட்டம் பகுதியில் நுாற்றுக்கணக்கான விவசாய கூலி தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இங்கு சாலை, நடைபாதை, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உரிய முறையில் செய்து தரப்படவில்லை. சாலையில் மண்ணரிப்பு ஏற்பட்டு, பாலத்தின் அருகே சேறு நிறைந்து காணப்படுகிறது. அருகில் காளான் உற்பத்தி செய்யும் இடங்களில் இருந்து திருப்பி விடப்படும் காளான் உரக்கழிவுகளும் இந்த சேற்றில் சேர்ந்துள்ளது. இதனால், பள்ளி குழந்தைகள், முதியோர் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்வோரும் சேற்றில் விழுகின்றனர். இந்த கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் தீர்வு ஏற்படவில்லை. என, இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.