ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தேவை! பொது போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த முன் வரணும்
ஊட்டி : 'ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பொது போக்குவரத்தை மக்கள் பயன்படுத்த ஒத்துழைக்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு ஆண்டு தோறும், 35 லட்சம் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. பிற நாட்களிலும் சராசரியாக, 8 ஆயிரம் வாகனங்கள் வருகின்றன. ஊட்டியை பொறுத்தவரை கடந்த பல ஆண்டுகளாக கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தாததால் போக்குவரத்து நெரிசல் என்பது வாடிக்கையாகி விட்டது. கடும் போக்குவரத்து நெரிசலால் சுற்றுலா பயணியர் பாதியிலேயே திரும்பி செல்லும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. 'இப்பிரச்னை தொடர் கதையானதால் நீலகிரிக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம்,' என, கோர்ட் உத்தரவிட்டது.இந்த உத்தரவு நடைமுறையிலும் உள்ளது. வாகனங்கள் இருமடங்கு அதிகரிப்பு
இந்நிலையில், ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கணக்குப்படி மாவட்டத்தில், சுற்றுலா வாடகை வாகனங்கள், 8000; பிற கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கை , 22 ஆயிரம் என , 30 ஆயிரம் வாகனங்கள் ஓடுகிறது. ஐந்தாண்டு இடைவெளியில் இந்த எண்ணிக்கை, 12 ஆயிரம் உயர்ந்துள்ளது. இதனால், 'கார்பன் டை ஆக்சைடு' அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மேலும், சுற்றுச் சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை ஒருபுறம் ஏற்பட்டு வருவதுடன், மறுப்புறம் போக்குவரத்து நெரிசலால் சுற்றுலா பயணியர், உள்ளூர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ''நீலகிரி மாவட்டம் பல்வேறு காலநிலையை கொண்ட பசுமை நிறைந்த மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கிய மலையில் அமைந்துள்ளது . இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை வளங்களை பாதுகாக்க முன்வர வேண்டும் . ஊட்டியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வரும் நவ., 1ம் தேதி முதல் பெரும்பாலான உள்ளூர் மக்கள் தங்களின் வாகனங்களை வீட்டில் நிறுத்தி, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஊட்டியில் இயக்கப்படும் நகர பஸ்களில் பயணிக்க வேண்டும். பொதுமக்களுக்கு தடை இன்றி சேவையை ஏற்படுத்தி தர, ஊட்டி நகரில் கூடுதல் நகர பஸ்கள் இயக்கப்படும். தவிர, ஊட்டி நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் நடந்து சென்று இயற்கை காட்சிகள், இதமான காலநிலையை அனுபவிக்க வேண்டும்,'' என்றார்.