உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரி மலை ரயில் மேம்பாட்டு பணி அவசியம்; கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்

நீலகிரி மலை ரயில் மேம்பாட்டு பணி அவசியம்; கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்

குன்னுார்; 'நீலகிரியில் மலை ரயிலில் உள்ள தீர்க்கப்படாத பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.ஊட்டி - குன்னுார் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும், மலை ரயிலுக்கு கடந்த, 2005ல் 'யுனெஸ்கோ' அங்கீகாரம் கிடைத்தது.கடந்த, 2023ல், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், ஊட்டி ரயில் நிலையத்திற்கு, 10 கோடி ரூபாய், குன்னுார் ரயில் நிலையத்திற்கு 6.7 கோடி ரூபாய், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு 8 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது.இந்நிலையில், மலை ரயில் பிரச்னைகள் தீர்வு காண்பது தொடர்பாக, ரயில்வே ஸ்டேஷன்கள் கமிட்டி உறுப்பினர் ஆலோசனைக் கூட்டம் நேற்று குன்னுார் ரயில் நிலையத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, கோவை ரயில்வே தலைமை வணிக ஆய்வாளர் சந்தீப் தலைமை வகித்தார். குன்னுார் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் கோபிநாத், சீனியர் செக்ஷன் இன்ஜினியர் சஞ்சித், சூப்ரவைசர் கிருஷ்ணமூர்த்தி, ஒப்பந்ததாரர் சந்தீப் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், ஸ்டேஷன் கமிட்டி உறுப்பினர்கள் ஈஸ்வரன், பாப்பண்ணன், சிவராஜ், பிரவீன், ராஜ்குமார், ரமேஷ், அனிதா, தேவி, விஷாலி ஆகியோர் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் விபரம்: l கடந்த ஆண்டு நடந்த ஆலோசனை கூட்டத்தில் வைத்த கோரிக்கைகள் தீர்வு காணப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. ஊட்டி, குன்னுார் இடையே மலை ரயிலில் உள்ளூர் மக்களுக்கு, சலுகை கட்டண பாஸ் வழங்கி வந்த நிலையில், தற்போது நிறுத்தப்பட்டுள்ளது; இதனை மீண்டும் செயல்படுத்துவதுடன், அனைத்து ரயில்களிலும் உள்ளூர் மக்கள் சென்று வர, தனி கட்டண நிர்ணயம் செய்ய வேண்டும். l ரயில் நிலையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு கார் அனுமதி வழங்கப்பட்டது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேட்டுப்பாளையத்தில் புதிதாகக் கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள நிலக்கரி நீராவி இன்ஜினை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். பழமை வாய்ந்த,84 எண் கொண்ட நிலக்கரி நீராவி இன்ஜினையும் பழுது பார்த்து இயக்க வேண்டும்.l ஊட்டி ரயில் நிலையத்தில் தண்ணீர், கழிப்பிடம், தடுப்புச் சுவர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். வெலிங்டன் ரயில் நிலையத்தை சுற்றி, புதர்களை அகற்ற வேண்டும். பள்ளி செல்லும் காலை நேரத்தில் கேட் மூடப்படுவதால் ஏற்படும் தாமதம் தவிர்க்க, வழி வகை செய்ய வேண்டும். l ரன்னிமேடு ரயில் நிலையத்தில் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தி, கழிப்பிடத்தை திறக்க வேண்டும். ஹில்குரோவ் ரயில்வே நிலையத்தில், அடிக்கடி ஏற்படும் தண்ணீர், கேண்டீன் உணவு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை வைத்தனர்.'இந்த கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாகவும், ஊட்டி மலை ரயில் நிலையத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொண்டு வருவது குறித்தும்,' அதிகாரிகள் விளக்கினர். மேலும், புனரமைக்கப்பட்ட ரயில் நிலைய திறப்பு விழா குறித்து விவாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை