ஆபத்தான பகுதிக்கு செல்ல அனுமதி இல்லை; ஊசிமலையில் வனத்துறை எச்சரிக்கை பலகை
கூடலுார்; 'கூடலுார் ஊசிமலை காட்சி முனைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், ஆபத்தான பகுதிக்கு செல்ல அனுமதி இல்லை,' என, வனத்துறை எச்சரித்து, அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.கூடலுார்-- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள, ஊசிமலை காட்சி முனை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் சிலர் வனத்துறை எச்சரிக்கை மீறி ஆபத்தான பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். கடந்த மாதம், 2ம் தேதி, காட்சி முனைக்கு சென்ற, கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆசிப், 23, ஜாபீர், 23, சினான் ஆகியோர், தடை செய்யப்பட்ட பாறை பகுதிக்கு சென்று, அங்கிருந்த தேன் கூட்டின் மீது கல் எரிந்துள்ளனர். தேனீக்கள் அவர்களை நோக்கி பறந்து வந்தது. இருவர் தப்பிவிட, தேனீக்கள் கொட்டியதில் ஜாபீர் உயிரிழந்தார்.இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப் படுத்தியுள்ளனர். மேலும், 'ஆபத்தான பகுதிக்கு செல்ல அனுமதி இல்லை; மீறினால் அபராதம் விதிக்கப்படும்,' என, அறிவிப்பு பலகையும் வைத்துள்ளனர். அங்கு செல்லும் சுற்றுலா பயணிகளிடம் இது தொடர்பாக எச்சரித்து வருகின்றனர்.வனத்துறையினர் கூறுகையில், 'சுற்றுலா பயணிகளின், பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவர்கள் ஆபத்தான பகுதிகளில் செல்ல தடை விதிக்கப்பட்டு, அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. வன ஊழியர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எச்சரிக்கை மீறும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்,' என்றனர்.