இப்பவோ... எப்பவோ? திக்... திக்... மரங்கள்!
குன்னுார்: -சிம்ஸ் பூங்கா நர்சரியில், கற்பூர மரம் விழுந்ததில் பெண் காயமடைந்ததுடன், 700 மலர் தொட்டிகள் சேதமடைந்தன. குன்னூர் சிம்ஸ் பூங்காவில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் உள்ளன. பூங்கா வளாகத்தில் உள்ள நர்சரியில் பசுமை குடில்கள் அமைத்து மலர் நாற்றுக்கள் தயார் செய்யப்படுகிறது. நேற்று காலை, பசுமை குடில் பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட தோட்டக்கலை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். பகல், 12:00 மணியளவில், முனீஸ்வரர் கோவில் அருகே இருந்த, 200 அடி உயரம் கற்பூர மரம் விழுந்தது. அங்கு பணியாற்றி வந்த அம்பிகா, 45, காயமடைந்தார். ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். நர்சரி பசுமை குடில்கள் சேதமடைந்ததுடன், 700க்கும் மேற்பட்ட மலர் நாற்றுக்கள், மலர் தொட்டிகள் சேதமாகின. குன்னூர் தீயணைப்புத்துறை வீரர்கள் மரத்தை அறுத்து அகற்றினர். பூங்கா மற்றும் நர்சரி பகுதிகளில் உள்ள அபாயகரமான மரங்களை அகற்ற வருவாய் துறையினரிடம் ஒரு மாதத்திற்கு முன்பே தோட்டக்கலை அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாமதிக்காமல் ஆய்வு மேற்கொண்டு ஆபத்தான மரங்களை உடனடியாக அகற்றி தோட்டக்கலை பணியாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.