அனுமதி இல்லாத வழித்தடத்தில் மினி பஸ் இயக்கம் முதல் கட்டமாக எச்சரித்து அனுப்பிய அதிகாரிகள்
பந்தலுார்: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மினி பஸ் இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது. அரசு பஸ் செல்லும் நெடுஞ்சாலைகள் தவிர்த்து, கிராமப்புற சாலைகளில் மக்கள் பயன்பெறும் வகையில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டது.அதில், பந்தலுாரில் இருந்து மேங்கோரேஞ்சு, ஏலமன்னா, கொளப்பள்ளி, தட்டாம்பாறை, அய்யன்கொல்லி, கல்லிச்சால், வெட்டுவாடி வழியாக தாளூர் பகுதிக்கு ஒரு பஸ் இயக்கம் துவக்கப்பட்டது.இந்த மினி பஸ் கொளப்பள்ளி சென்று தட்டாம்பாறை கிராமம் வழியாக அய்யன்கொல்லி செல்வதற்கு பதில், அரசு பஸ் செல்லும் கொளப்பள்ளி, மழவன் சேரம்பாடி வழியாக அரசு பஸ் முன்பாக, அய்யன்கொல்லி பகுதிக்கு இயக்கப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அரசு போக்குவரத்து துறை பறக்கும் படை அதிகாரிகள், ஆய்வு செய்து மினி பஸ் டிரைவரிடம் கேட்டபோது, 'குறிப்பிட்ட கிராம சாலையில் இயக்கினால் மினி பஸ்சுக்கு பாதுகாப்பு கிடையாது. அதனால் நாங்கள் இப்படித்தான் இயக்குவோம்,' என, கூறி அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், மக்கள் அதிருப்தி அடைந்தனர்.மக்கள் கூறுகையில், 'கிராமப்புற பகுதி மக்கள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இயக்க வேண்டிய மினி பஸ், நெடுஞ்சாலையில் இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.போக்குவரத்து கழக கிளை மேலாளர் அருள் கண்ணன் கூறுகையில்,'' மினி பஸ் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனி கிராமப்புறங்களுக்கு இயக்குவதாக உறுதி அளித்துள்ளனர். மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.