சாலையோரம் நிறுத்தப்படும் பழைய வாகனங்கள்; போக்குவரத்து, பொதுமக்களுக்கு சிக்கல்
கூடலுார்; கூடலுார் - கோழிக்கோடு சாலையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள பயனற்ற பழைய வாகனங்களால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. தமிழக, கேரள, கர்நாடகாவை இணைக்கும் முக்கிய பகுதியாக, கூடலுார் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள சாலைகள் பெரும்பாலும் சேதமடைந்துள்ளது. சாலையோரங்களில் வளர்ந்துள்ள முட்புதர்கள் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இந்நிலையில், செம்பாலா, நந்தட்டி பகுதிகளில் கோழிக்கோடு சாலை ஓரங்களையும், தொரப்பள்ளி பகுதியில் மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரம் பழைய வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இங்கு, நிறுத்தப்படும் வாகனங்களை சுற்றிலும் செடிகள் வளர்ந்து வருகிறது. 'போக்குவரத்து இடையூறாக சாலையோரங்கள், பயனற்று நிறுத்தப்படும், இது போன்ற வாகனங்களை அகற்ற, அரசு துறையினர் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் ரவி கூறுகையில், ''இப்பகுதி சாலையோரங்களில், வாகன உரிமையாளர்கள், அல்லது தனியார் பணிமனை உரிமையாளர்கள் பயன்படுத்த முடியாத வாகனங்களை சாலை ஓரங்களில் நிறுத்தி செல்கின்றனர். இதை தடுக்க யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்துவது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க அரசு துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது,'' என்றனர்.