ஊட்டி தாவரவியல் பூங்கா புல்தரையில் குடில்கள்: வேறு இடத்துக்கு மாற்ற வலியுறுத்தல்
ஊட்டி: 'ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பிரதான புல் தரையில் குடில்கள் அமைக்கும் பணிகளை, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், அரசு தாவரவியல் பூங்கா பிரதான புல்தரையில், இதமான காலநிலையை ரசித்தவாறு ஆடி, பாடி மகிழ்வது வழக்கம். குறிப்பாக, சிறுவர்கள் பசுமையான புல்தரையில் குதூகலத்துடன் விளையாடி வருகின்றனர். பூங்கா நிர்வாகம், புல் தரையை நேர்த்தியாக வெட்டி பராமரிப்பதற்காக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, சுற்றுலா பயணிகள் வராத வகையில், ஒரு பகுதியில் வேலி அமைத்திருந்தனர். இந்நிலையில், பசுமையாக மாறி இந்த பிரதான புல்தரை மைதானத்தில் உணவு திருவிழா நடத்துவதற்காக, இரண் நாட்களாக குடில்கள் அமைக்கும் பணியை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. தாவரவியல் பூங்காவை பொருத்தமட்டில், எந்த ஒரு முக்கிய நிகழ்ச்சிகளாக இருந்தாலும், பிரதான புல்தரை மைதானத்தின் எதிரே உள்ள பகுதியில் குடில்கள் அமைப்பது வழக்கம். அந்த பகுதியில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நிகழ்ச்சிகள் நடக்கும். சுற்றுலா பயணிகள் கூறுகையில், ‘பூங்காவின் மையப் பகுதியில் உள்ள புல் தரையில் குடில்கள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கையை, மறுபரிசீலனை செய்ய வேண்டும். நுழைவு கட்டணம் செலுத்தி வரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதால் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்,’ என்றனர். தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலர் ரமேஷ் கூறுகையில், ‘‘பொதுப்பணித்துறை வாயிலாக, அரங்குகள் அமைக்கும் பணி நடக்கிறது. முழு விபரம் தெரியவில்லை. இது குறித்த மாவட்ட நிர்வாக உயர் அதிகாரிகளை கேட்கவும்,’’ என்றார்.