ஊசிமலை காட்சிமுனை திறப்பு ;சுற்றுலா பயணியர் குதுாகலம்
கூடலூர்: -ஊசிமலையில் காட்டு யானை குட்டி ஈன்றதால், மூடப்பட்ட காட்சி முனை மீண்டும் திறக்கப்பட்டது. கூடலூரிலிருந்து, 9 கி.மீ., தொலைவில், ஊட்டி தேசிய நெடுஞ்சாலைய ஒட்டி அமைந்துள்ளது ஊசிமலை காட்சி முனை. கடந்த, 23ம் தேதி காலை, பணிக்கு சென்ற ஊழியர்கள், நுழைவு வாயிலை திறக்க சென்ற போது, அப்பகுதியில் காட்டு யானை குட்டி ஈன்றிருப்பதும், அதன் அருகில் தாயுடன் மேலும் இரண்டு யானைகள் இருப்பது தெரிய வந்தது. அதிகாரிகள் உத்தரவுப்படி, நுழைவு வாயில் மூடப்பட்டு, சுற்றுலா பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டது. வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ட்ரோன் கேமரா வாயிலாக ஆய்வு செய்தனர். ஆய்வில், குட்டியுடன் யானைகள், வேறு பகுதிக்கு சென்றதை உறுதி செய்தனர். வன அதிகாரிகள் உத்தரவுபடி, நேற்று முன்தினம் முதல் ஊசிமலை காட்சி முனை திறக்கப்பட்டு, சுற்றுலா பயணியர் வர அனுமதி அளிக்கப்பட்டது. சுற்றுலா பயணியர் குதுாகலத்துடன் வந்து ரசித்து செல்கின்றனர்.