ஆபரேஷன் சிந்துார் வெற்றி சைக்கிள் பயணம்; ஹரியானா வாலிபருக்கு பா.ஜ., வரவேற்பு
ஊட்டி: ஆபரேஷன் சிந்துார் வெற்றியை கொண்டாடும் விதமாக, ஹரியானாவில் இருந்து சைக்கிள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஊட்டி வந்த வாலிபருக்கு பா.ஜ..,வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்துார் வெற்றி, பிரதமர் மோடியின், 75வது பிறந்தநாளை முன்னிட்டு ஹரியானாவை சேர்ந்த இளைஞர் தீபக் ஷர்மா சிறப்பு சைக்கிள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஹரியானா மாநிலம் பானிபட்டில் துவங்கிய இந்த பயணம், டில்லி, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா வழியாக வந்து, நேற்று நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வந்தடைந்தது. ஊட்டியில் பா.ஜ., மாவட்ட தலைவர் தருமன், முன்னாள் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் தலைமையில், பா.ஜ.நிர்வாகிகள், மகளிர் அணியினருடன் சேர்ந்து தீபக் ஷர்மாவிற்கு வரவேற்பு அளித்து பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து, ஊட்டியிலிருந்து கோவைக்கு தனது சைக்கிள் பயணத்தை அவர் தொடர்ந்தார்.