உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விதிமீறிய கட்டடங்களின் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு! கமிஷனர் தலைமையில் சீல் வைக்கும் பணி

விதிமீறிய கட்டடங்களின் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு! கமிஷனர் தலைமையில் சீல் வைக்கும் பணி

ஊட்டி; 'ஊட்டி நகரில் அனுமதி இல்லாமலும், விதிகளை மீறியும் நடந்து வரும் கட்டட பணிகள் குறித்து முறையாக ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்,'என, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதை அடுத்து, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், அனுமதி இல்லாமலும், விதிகளை மீறியும் கட்டப்பட்டு வரும் கட்டடங்களை கட்டுப்படுத்த, மாநில அரசு 'மாஸ்டர் பிளான்' சட்டத்தை செயல்படுத்தி உள்ளது. அதன்படி, 'அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டக்கூடாது, வீட்டுக்கு என்று அனுமதி பெற்று தங்கும் விடுதி நடத்தி அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்த கூடாது. அத்தகைய விதிமீறிய கட்டடங்கள் குறித்து பட்டியல் எடுத்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பல இடங்களில் விதிமீறல் இந்நிலையில், 'ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் சமீப காலமாக விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன,' என, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்துள்ளன. மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி, நகராட்சி அதிகாரிகள், அனுமதி மீறியும், விதிகளை மீறியும் கட்டப்பட்ட கட்டடங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக, ஊட்டி நகராட்சி கமிஷனர் கணேசன் தலைமையில், நகராட்சி கட்டட பிரிவு ஆய்வாளர் மகேந்திரன் உட்பட நான்கு பேர் கொண்ட கு ழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு இரு நாட்களாக, புதிய கட்டுமானங்கள் நடக்கும் பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஊட்டி ரோகிணி பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் விதிகளை மீறி கட்டுமான பணிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த கட்டடத்துக்கு விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. எனினும் பணிகள் நடைபெறுவது தெரிய வந்தது. தொடர்ந்து, ரோகிணி பகுதிக்கு சென்ற கமிஷனர் தலைமையிலான குழுவினர், அந்த கட்டடத்திற்கு, 'சீல்'வைத்தனர். எல்க்ஹில் பகுதியிலும் விதிகளை மீறிய ஒரு கட்டடத்திற்கு'சீல்' வைக்கப்பட்டது. நகராட்சி கமிஷனர் கணேசன் கூறுகையில்,'' ஊட்டியில் அனுமதி பெறாமல், அனுமதி பெற்று விதிகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விதி மீறி கட்டப்பட்டு வரும் கட்டடங்களுக்கு 'சீல்' வைக்கும் பணி நடந்து வருகிறது. நகரில் பல்வேறு பகுதிகளில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் உரிமையாளர்கள் நேரில் வந்து ஆவணங்களை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ