உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வயலில் பழங்குடியினர் நடனத்துடன் நெல் நடவு; விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

வயலில் பழங்குடியினர் நடனத்துடன் நெல் நடவு; விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு

பந்தலுார்: பந்தலுார் அருகே தாளூரில் செயல்படும், நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில், கல்லுாரி வளாகத்தில் உள்ள, 6- ஏக்கர் வயல்வெளியில் கடந்த ஆறு ஆண்டுகளாக, நெல் விவசாயம் மேற்கொள்ளும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், கல்லுாரி செயலாளர் ரசித் கசாலி தலைமை வகித்து துவக்கி வைத்து பேசுகையில், ''மாறிவரும் கலாச்சாரத்தால் இளைய தலைமுறையினர், பெரும்பாலான நேரங்களில்மொபைல் பயன்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயம் குறித்து இளைய தலைமுறையினர் மத்தியில் எந்தவித விழிப்புணர்வும் இல்லாத சூழலில், நெல் உள்ளிட்ட விவசாய பணிகளை எவ்வாறு மேற்கொள்வது மற்றும் அதில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதில், ஒரு கட்டமாக வயலை உழுது நெல் விதை, விதைத்து, நெல் நாற்றுகள் நடவு செய்து அதனை, அறுவடை செய்யும் வரை மாணவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. மாணவர் மத்தியிலும் இதற்கு வரவேற்பு மற்றும் ஆர்வம் உள்ள நிலையில் தொடர்ச்சியாக இது போன்ற விவசாயம் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்,'' என்றார். தொடர்ந்து, பணியர் சமுதாய பழங்குடியின மக்களின் இசை மற்றும் நடனத்துடன் கல்லுாரி மாணவர்கள், முதல்வர் பாலசண்முக தேவி, கண்காணிப்பாளர் மோகன் பாபு, மேலாளர் உம்மர், உடற்கல்வி இயக்குனர் ஷெரில் வர்கீஸ் ஆகியோர் இணைந்து நெல் நாற்றுகள் நடவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை