சீரமைக்காத புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதி: பயணிகள் அதிருப்தி
கூடலுார் ; கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.கூடலுார் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானா அருகே, புதிய பஸ் ஸ்டாண்ட் கடந்த பிப்., முதல் செயல்பட்டு வருகிறது. ஆனால், பஸ் ஸ்டாண்ட் முன்புறப்பகுதிகள் சீரமைக்கப்படவில்லை. இதனால் பருவமழையின் போது அதில், மழைநீர் தேங்கி பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினார். இப்பகுதி, 'விரைவில் சீரமைக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.தற்போது, கோடை காலம் என்பதால், சீரமைக்கப்படாத தரைத்தளம் மற்றும் காற்று வீசும் போது, பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் ஏற்படும் துாசு படலத்தால் பயணிகள் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து பஸ் ஏற சிரமப்பட்டு வருகின்றனர். இதனால், சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்படும் ஆபத்தும் உள்ளது.பயணிகள் கூறுகையில், 'புதிதாக கட்டப்பட்ட பஸ் ஸ்டாண்ட் வளாகம் சீரமைக்கப்படாததால், மழை காலங்களில் மழை நீர் தேங்கியும், வெயில் காலங்களில் அடிக்கடி எழும் துாசு படலத்தால், பயணிகள் காத்திருந்து பஸ் ஏறி செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். 'எனவே, உரிய நிதி ஒதுக்கி பஸ் ஸ்டாண்டின் முன்பகுதியை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.