மலைப்பாதையில் உயிருக்கு உலை; அசுர போக்குவரத்து கழகம்! பாடாவதி பஸ்களில் பயணிப்போர் கலக்கம்
தமிழகத்தில் முதன் முதலில், 1972ல் பஸ்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்ட போது, நீலகிரியில், அனைத்து பஸ்களும் இத்திட்டத்தின் கீழ் வந்தன. இதனால், தனியார் பஸ்களின்றி அரசு பஸ்களை மட்டுமே நம்பி மலை மாவட்ட மக்கள் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆரம்பத்தில், 450 அரசு பஸ்கள் இயங்கிய நிலையில், மக்கள் தொகை அதிகரித்து தற்போது, 8 லட்சத்திற்கு மேல் உள்ள சூழ்நிலையில், 335 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதில், 80 கி.மீ., துாரத்துக்குள், 4 ஸ்டாப்களில் வசூலிக்க வேண்டிய 'எக்ஸ்பிரஸ்' கட்டணம், ஆர்.டி.ஓ., விதிமுறைகள் மீறி, பல்வேறு பகுதிகளுக்கும் இயக்கும் பஸ்களில் வசூலிக்கப்படுகிறது. கடந்த, 2005ல், மினி பஸ்களுக்கு அனுமதி வழங்கிய போது, 110 அரசு பஸ்களின் வழித்தடங்கள் ரத்து செய்யப்பட்டன, சில ஆண்டுகள் மட்டும் இயக்கப்பட்ட பெரும்பாலான மினி பஸ்கள் தற்போது இயங்காமல் போனது. குறிப்பிட்ட வழித்தடங்களில் மீண்டும் அரசு பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மலை மக்கள் நாள்தோறும் அவதிப்படுகின்றனர். விடியல் கிடைக்காத மகளிர்
மற்ற மாவட்டங்களில் அனைத்து நகர பஸ்களும் 'விடியல்' பஸ்களாக இயக்கப்பட்டு, மகளிர் பயனடையும் நிலையில், குன்னுார், ஊட்டியில், 10க்கும் குறைவான நகர பஸ்கள் மட்டுமே, இத்திட்டத்தின் கீழ் இயக்கப்படுகிறது. கிராமங்களுக்கு இயக்கும், 165 பஸ்களில், 93 பஸ்கள் 'விடியல் பஸ்களாக' இயக்கப்படுகின்றன. அதுவும், 35 கி.மீ., துாரத்துக்கு குறைவாக உள்ள கிராமங்களுக்கு மட்டுமே விடியல் பஸ் இயக்குவது, அரசின் மீது மகளிருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 'பீக் ஹவர்ஸ்' அவஸ்தை
'பீக் ஹவர்ஸ்' நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க, அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டும், நீலகிரியில் இந்த உத்தரவு செயல்படுத்தப்படவில்லை. குறிப்பாக, குன்னுார்-- ஊட்டி இடையே உள்ள அனைத்து ஸ்டாப்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் லோக்கல் பஸ்கள் இல்லாததால், நெடுந்துாரம் இயக்கும் பஸ்களில் கூட்ட நெரிசலில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிகள் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மேலும், மலை பகுதியில் உள்ள பல பஸ்கள் மிகவும் பழமை வாய்ந்ததாக உள்ளன. 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்படும் பஸ்கள் பழுதடைந்து அடிக்கடி நிற்பதால் பயணிகள் மாற்று பஸ்களில் நெரிசலில் செல்லும் அவலம் அவ்வப்போது அரங்கேறுகிறது. பஸ்சிற்குள் மழை
மழை காலங்களில், ஊட்டி,- குன்னுார், கூடலுார், பந்தலுார் உட்பட பல கிராமங்களுக்கு இயக்கப்படும் பழமையான பஸ்களில் குடை பிடித்து பயணம் செய்யும் அவலமும் நீடிக்கிறது. பஸ்களுக்குள் உள்ள தடுப்பு இரும்பு பிடிகள் ஆட்டம் காண்கிறது. ஆங்காங்கே அடிக்கப்பட்ட ஆணிகளும் பயணிகளை பதம் பார்க்கிறது. ஊட்டியில் இருந்து சமவெளி பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள், பர்லியாரில் உணவு விடுதியில் நிறுத்தாமல், கல்லார் பகுதியில் உள்ள, கூடுதல் விலையுள்ள, தனியார் உணவு விடுதியில், உணவுக்காக நிறுத்துவதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். மலை பகுதியில் உள்ள போக்குவரத்து பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு அதிருப்தி அதிகரித்து வருகிறது. கூடலுார்
கூடலுாரில் புதிதாக கட்டப்பட்டு கடந்த ஆண்டு பிப்., மாதம் திறக்கப்பட்ட, புதிய பஸ் ஸ்டாண்டின் முன்புற வளாகம் சீரமைக்காமல் குண்டும், குழியுமாக உள்ளது. அதில், தேங்கும் மழை நீரால், பயணிகள் நடந்து செல்லவும், பஸ் ஏறி இறங்கவும் சிரமப்பட்டு வருகின்றனர். சாலையோர நிழல்குடைகள், சேதமடைந்தும் பராமரிப்பின்றியும், வாகனங்கள் மோதியும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இப்பகுதிகளில், மழை காலங்களில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க, பழைய நிழல் குடைகளுக்கு மாற்றாக புதிய நிழல் குடைகள் அமைக்க வேண்டும். உதிரி பாகங்கள் பற்றாக்குறை காரணமாக, பழுதடைந்த பஸ் சீரமைக்க ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரத்தில், கூடலுாரிலிருந்து சமவெளி பகுதிக்கு குறிப்பாக, கோவை, ஈரோட்டுக்கு நேரடியாக பஸ் இயக்க வேண்டும். பந்தலுார்
தமிழகத்தின் எல்லை பகுதியாக பந்தலுார் உள்ளது. கிராம சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை கடந்து, 100-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. ஆனால், அரசு போக்குவரத்து கழகம், வெளி மாநிலம் மற்றும் வெளியூர்களுக்கு பஸ்களை இயக்குவதில் காட்டும் ஆர்வத்தை, கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் இயக்குவதில் காட்டுவதில்லை.ஊட்டி, கோத்தகிரி போன்ற பகுதிகளில் இயக்கப்பட்டு, பழுதடைந்த பஸ்களை மறுசீரமைப்பு செய்து, பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளுக்கு இயக்குவதால், அடிக்கடி பழுதடைவது மற்றும் இழுவை திறன் இல்லாமல் நடுவழியில் அடிக்கடி நிற்கிறது.கல்லுாரி மற்றும் பள்ளி, ஐ.டி.ஐ., மாணவர்களும் அதிக அளவில் பஸ்களில் பயணிப்பதால் பெரும்பாலான பயணிகள் டாக்சி ஜீப்புகள் மற்றும் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிப்பது தொடர்கிறது.
மாணவ, மாணவியர் பாதிப்பு
நீலகிரி அரசு போக்குவரத்து கழகத்தின் மீது ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ள மனோகரன் கூறுகையில், ''நீலகிரியில் அனைத்து பஸ்களுக்கும், மாவட்ட போக்குவரத்து ஆணையம் சாதாரண கட்டணம் நிர்ணயம் செய்து அங்கீகரித்துள்ள போதும், ஐகோர்ட் உத்தரவை அவமதித்து, எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலித்து தற்போதும் பயணிகளை போக்குவரத்து கழகம் சுரண்டுகிறது. 40 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு அரசு பஸ் பாஸ் வழங்கிய நிலையில், ஒருமணி நேரத்தில் செல்லும் தொலைவில் உள்ள பள்ளிக்கு, பஸ்கள் இல்லாததால், 3 மணி நேரத்திற்கு முன்பு மாணவர்கள் புறப்பட்டு செல்கின்றனர்.கிராமங்களுக்கு இயக்க வேண்டிய மினி பஸ்கள், நகர பகுதிகளில் இயக்குவதால், ஏற்கனவே ரத்து செய்த, 101 வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்குவது அவசியம். சமவெளியில் ஓடி தேய்ந்த பஸ்கள் இங்கு கொண்டு வருவதை தவிர்த்து, புதிய பஸ்கள் இயக்க வேண்டும்,'' என்றார்.
கிராம பஸ்களை அதிகப்படுத்த வேண்டும்
பந்தலுார் பயணிகள் நல சங்க தலைவர் பேபி கூறுகையில்,''--தமிழக- கேரளா மாநிலங்களை இணைக்கும் இந்த பகுதியில், போதிய அளவு பஸ்களை இயக்காததால், பயணிகள் சிரமப்பட்டு சில நேரங்களில் ஊட்டி, கோவை வரை நின்றபடி பயணிக்கும் நிலை தொடர்கிறது. பழைய பஸ்களுக்கு வர்ணம் பூசி புதிய பஸ்களை போல் இயக்கும் நிலையில் நடுவழியில் பழுதடைந்து நிற்பது தொடர்கிறது.தாலுகா தலைநகரான பந்தலூரில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்களை இயக்குவதுடன், தாலுகாவில் கிராமங்களை இணைக்கும் வகையில் அரசு சுற்று பஸ்கள் கூடுதலாக இயக்க பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த போதும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. இதனால், பந்தலுார் வழியாக அனைத்து பஸ்களும் சென்றபோதும், இருக்கை வசதி கிடைக்காமல் பயணிக்கின்றனர். துாரத்தை மட்டும் கணக்கு காட்டி, பஸ்களை இயக்குவதை தவிர்த்து, மக்கள் பயன் பெறும் வகையில் இயக்க வேண்டும்,'' என்றார்.
பஸ் நிறுத்த போதிய இடமில்லை
கோத்தகிரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகி ராஜன் கூறுகையில்,'' கோத்தகிரியில் இருந்து, சமவெளி பகுதிகள் மற்றும் ஊட்டி, குன்னுார் உட்பட கிராமப்புறங்களுக்கு, 55 அரசு பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இதை தவிர, 10 மினி பஸ்கள் இயங்குகின்றன. 25 ஆண்டுகளுக்கு முன்பு, அண்ணா பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. தற்போது, பல மடங்கு மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில், பஸ் நிலையத்தில் சரிவர பஸ்கள் நிறுத்த முடியாமல் இட நெருக்கடி உள்ளது. இதனால், கிராமப்புறங்கள் மற்றும் ஊட்டி, குன்னுார் பஸ்கள் சாலையில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது.இது ஒரு புறம் இருக்க, பஸ் நிலையம் மேற்கூரை சரிவர அமைக்கப்படாததால் மழை நாட்களில் ஒழுகுகிறது. மேலும், மேல் பகுதியில் அபாய மரங்கள் உள்ளதால், அசம்பாவிதமும் நடக்க வாய்ப்பு உள்ளது. பஸ் நிலையம் தரைத்தளம் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் நீண்டு கொண்டிருப்பதால், பயணிகள் சென்று வரும்போது, தடுக்கி விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை அவசியம்,'' என்றார். -நிருபர் குழு-