டாக்டர் இல்லாததால் நோயாளிகள் அவதி; எடக்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவலம்
மஞ்சூர்; 'எடக்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டாக்டர் நியமிக்க வேண்டும்,' என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். குந்தா தாலுக்காவுக்கு உட்பட்ட எடக்காடு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. எடக்காடில் உள்ள தலையட்டி, நடுஹட்டி, சூண்டட்டி, முக்கிமலை, கவுண்டம்பாளையம், பாதக்கண்டி, காந்தி கண்டி, புது அட்டு பாயில் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் தினசரி சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.கடந்த சில மாதங்களாக டாக்டர் இல்லாததால் அங்கு பணிபுரிந்து வரும் செவிலியர்கள் , மருந்தாளுனர்கள் அவசர சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. உரிய சிகிச்சை கிடைக்காததால், எடக்காடு சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மக்கள் கூறுகையில்,'எடக்காடு சுற்றுவட்டார பகுதி மக்கள் இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வருகின்றன. சமீபகாலமாக டாக்டர் இல்லாததால் இப்பகுதி மக்கள் ஊட்டி, மஞ்சூர் உள்ளிட்ட தொலைதுார பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் மருத்துவ துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு டாக்டர் நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.