வீடுகட்ட கிடைத்த உத்தரவு; இடம் இல்லாமல் தவிக்கும் மக்கள்
பந்தலுார்; பந்தலுார் அருகே புஞ்சை கொல்லி பழங்குடியின கிராமத்தில், வீடு கட்ட உத்தரவு கிடைத்தும் இடம் இல்லாமல் பழங்குடியின மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதிகளில் மண்ணின் மைந்தர்களான, பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குரும்பர், பணியர், காட்டு நாயக்கர் சமுதாய மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், பெரும்பாலான பழங்குடியின கிராமங்களில் வீடுகள் இடிந்து, சிதிலமடைந்து தார்பாலின் மற்றும் 'பிளாஸ்டிக்' வேயப்பட்ட குடிசைகளில் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் தொகுப்பு வீடுகள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, புஞ்சைகொல்லி பழங்குடியின கிராம மக்கள், வீடு கட்ட இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். உத்தரவு கிடைத்தும் பயனில்லை
இந்த கிராமத்தில் காட்டுநாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த, 20 பழங்குடியினர் குடும்பத்தினர், ஏழு வீடுகளில் குடியிருந்து வருகின்றனர். இவர்களின் வீடுகள் சேதமடைந்து குடியிருக்க முடியாத சூழல் உள்ளது. இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. தொடர்ந்து, ஆய்வு செய்த அதிகாரிகள் தற்போது, கமலா, சாந்தா, சிவன், தங்கமணி, சிந்து, பத்மினி, மாதவி ஆகிய ஏழு குடும்பங்களுக்கு, அரசு தொகுப்பு வீடு கட்ட உத்தரவு கடிதம் வழங்கி உள்ளனர். ஆனால், வீடுகள் கட்ட இடம் கிடைக்காத நிலையில், உத்தரவை மட்டும் வாங்கி வைத்து கொண்டு சேதமடைந்த குடியிருப்புகளில், அச்சத்துடன் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதிகாரிகள் மனசு வைக்கணும்
காட்டுநாயக்கர் சங்க தலைவர் சந்திரன் கூறுகையில், ''ஏற்கனவே குடியிருந்து வரும் பகுதியில் வீடுகள் கட்ட முடியாத நிலையில், கடந்த பல ஆண்டுகளாக மாற்றிடம் வேண்டுமென கேட்டு வருகிறோம். தற்போது, உள்ள கிராமத்தை ஒட்டிய மேட்டுப்பாங்கான பகுதியில் சாலையை ஒட்டி, அரசு நிலம் உள்ள நிலையில் அதை பழங்குடியின மக்களுக்கு வழங்க வலியுறுத்தி உள்ளோம். அதிகாரிகள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்காததால், வீடு கட்ட உத்தரவு கிடைத்தும் வீடு கட்ட முடியாத நிலையில் தவித்து வருகின்றனர். எனவே, மண்ணின் மைந்தர்களான பழங்குடியின மக்களுக்கு, அரசு வீடு கட்ட இடத்தை உடனடியாக ஒதுக்கீடு செய்து மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்,'' என்றார்.