பசுமை தமிழகம் திட்டத்தில் மாநிலம் முழுவதும் மரக்கன்று நடவு
குன்னுார்: 'கடந்த ஆண்டு பசுமை தமிழகம் திட்டத்தில் மரகன்று நடவு செய்யும் பணி துவக்கப்பட்டது; முழுமை பெற வைக்க நெடுஞ்சாலை, பொதுப்பணி துறை இடங்கள், பள்ளிகளில் மரக்கன்று நடவு செய்யப்பட்டு வருகிறது,' தெரிவிக்கப்பட்டது.குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் ஏரி பூங்காவில், உலக சுற்றுலா தின விழா மற்றும் 'சுவச்தா ஹி சேவா' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சுற்றுலாதுறை அமைச்சர் ராமச்சந்திரன் துாய்மை பணியை துவக்கி வைத்து பேசியதாவது:கல்வி, வேலை உள்ளிட்டவைகளுக்கு இடையே, அனைவருக்கும் மனதை புத்துணர்வு பெற வைத்து மேலும் சிறப்பாக பணியாற்ற சுற்றுலா பயனாக அமைகிறது. நம் மாநிலத்தில், 12 வகையான சுற்றுலா வகைகள் உள்ளன. ஆன்மிக சுற்றுலாவில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில், 14 பஸ்கள் இயக்கப்படுகிறது. திருப்பதி உள்ளிட்ட இந்த சுற்றுலாவில் பயணம் மட்டுமின்றி தங்கும் இடம், தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு துவக்கப்பட்ட பசுமை தமிழகம் திட்டத்தில் மரகன்று நடவு செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் முழுமை பெற நெடுஞ்சாலை, பொதுப்பணி துறை இடங்கள், பள்ளிகளில் மாணவர்களின் பிறந்தநாள் தினங்களில் மரக்கன்று நடவு செய்யப்பட்டு வருகிறது,'' என்றார்.கன்டோன்மென்ட் வாரிய முதன்மை செயல் இயக்குனர் வினித் பாபா சாகிப் லோட்டே, நியமன உறுப்பினர் ஷீபா பேசினர். கன்டோன்மென்ட் முன்னாள் துணைத் தலைவர் வினோத்குமார், முன்னாள் உறுப்பினர் மார்ட்டின், ஜே.சி.ஐ., நிர்வாகிகள் விஜயகாந்த், கோவர்த்தணன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை கன்டோன்மென்ட் பொறியாளர் சுரேஷ் குமார், சுகாதார மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.