மாநில எல்லையில் சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் பை மற்றும் பாட்டில்கள் பறிமுதல்
கூடலுார்; தமிழக -கேரளா எல்லையில், சுற்றுலா பயணிகள் எடுத்து வரும், 'பிளாஸ்டிக்' பை மற்றும் பாட்டில்களை பறிமுதல் செய்யும் பணி துரிதமாக நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க, 21 வகையான பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் எடுத்து வருவதை தடுக்க, கூடலுாரை ஒட்டிய மாநில எல்லைகளில், வருவாய் துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஊழியர்கள், சுற்றுலா வாகனங்களை சோதனை செய்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்த பின், அனுமதித்து வருகின்றனர். எனினும், இதனை முழுமையாக தடுக்க முடியவில்லை. இந்நிலையில், கூடலுார் அருகே, தமிழக-கேரளா எல்லையில் உள்ள நாடுகாணி உள்ளிட்ட வன சோதனை சாவடிகளில் உள்ள வன ஊழியர்களும், பிளாஸ்டிக் பை மற்றும் பாட்டில்களை பறிமுதல் செய்யும் பணியை துவங்கி உள்ளனர். தேவாலா வனச்சரகர் சஞ்சிவ் கூறுகையில்,''மாநில எல்லைகள் உள்ள சோதனை சாவடிகளில், சுற்றுலா வாகனங்களை சோதனை செய்து, நீலகிரியில் தடை செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்ய, கூடலுார் வன அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், நாடுகாணி சோதனை சாவடியில், கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில், சோதனை செய்து, நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் தண்ணீர், குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்க தனியாக இரும்பு கூண்டும் அமைத்துள்ளோம்,'' என்றார்.