| ADDED : நவ 26, 2025 07:43 AM
ஊட்டி: கர்நாடகா அரசு பஸ்சில் சுற்றுலா பயணியர் கொண்டு வந்த, 23 பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்பட்டது. நீலகிரியின் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கில், பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தட்டுகள், ஒரு லிட்டர் மற்றும் 2 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் உட்பட, 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும். பிற மாநிலங்களில் இருந்து சுற்றுலா வாகனங்கள்,அரசு பஸ்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்து சோதனை சாவடிகள் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு, சுற்றுலா பயணியர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகளிடம் வாக்குவாதம் இந்நிலையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, உள்ளாட்சி அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை கர்நாடகாவிலிருந்து, ஊட்டிக்கு வந்த கர்நாடகா அரசு பஸ்சை மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட மகளிர் குழுவினர் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து திடீர் சோதனை மேற்கொண்டனர். பஸ்சில் தண்ணீர் பாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்து அபராதம் விதிக்க முற்பட்டபோது, பஸ்சில் வந்த சுற்றுலா பயணியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ பகுதிக்கு வந்து, 23 குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்து , அபராதம் விதித்தனர். பின், பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.