உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  நீர்நிலைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்; குடிநீர் மாசுபடுவதுடன் விலங்குகளுக்கு ஆபத்து

 நீர்நிலைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள்; குடிநீர் மாசுபடுவதுடன் விலங்குகளுக்கு ஆபத்து

கூடலுார்: கூடலுார் பகுதியில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் நீர் மாசுபடுவதுடன் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தின், சுற்றுச்சூழலை பாதுகாக்க, 21 வகையான பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் மற்றும் மாநில எல்லைகளில், தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, அனைத்துவாகனங்களிலும் சோதனை செய்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து வருகின்றனர். எனினும், இதன் பயன்பாட்டை முழுமையாக தடுக்க முடியவில்லை. மேலும், பயன்படுத்திய பிளாஸ்டிக் கழிவுகளை சாலையோரம், நீர்நிலைகளில் வீசி செல்கின்றனர். அவ்வப்போது உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டாலும் இதனை முழுமையாக தடுக்க முடியவில்லை. இவ்வாறு வீசி செல்லும் பிளாஸ்டிக் கழிவுகள் நீர் நிலைகளில் தேங்குவதால் நீர் மாசுபடுவதுடன், நீர் வழிந்தோட தடை ஏற்படுகிறது. இதனால், குடிநீர் ஆதாரங்கள் கால்நடைகள், வனவிலங்குகள் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், நாடுகாணி அருகே, கோழிக்கோடு சாலை ஒட்டி செல்லும் நீரோடையில் வீசப்படும் பிளாஸ்டிக்கழிவுகள் தேங்கி நீர் மாசுபடுவதுடன், பருவமழை காலத்தில் தண்ணீர் செல்ல தடை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. மேலும், இப்பகுதியில் வரும் விலங்குகள் தண்ணீரை குடிப்பதால், அவற்றின் உயிருக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அரசு அதிகாரிகள் நீர்நிலைகளை ஆய்வு செய்து குவிந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் நிலை பகுதிகளில் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'பயன்படுத்திய பிளாஸ்டிக் கழிவுகளை நீர்நிலைகளில் வீசி செல்வதால், நீர் மாசுபட்டு சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், அதனை பயன்படுத்தும் மக்கள், கால்நடைகள், வனவிலங்குகள் பாதிக்கும் ஆபத்து உள்ளது. இதனை தடுக்க, கண்காணிப்பு மற்றும் சோதனை பணியை தீவிர படுத்த வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ