உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இயற்கைக்கு எமனாகும் பிளாஸ்டிக் கழிவு; பயன்பாடு அதிகரிப்பால் சுற்றுச்சூழலுக்கு அழிவு

இயற்கைக்கு எமனாகும் பிளாஸ்டிக் கழிவு; பயன்பாடு அதிகரிப்பால் சுற்றுச்சூழலுக்கு அழிவு

நடப்பாண்டின், உலக சுற்றுச்சூழல் தினத்தின் கரு பொருளாக, 'பிளாஸ்டிக் மாசுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல்' என, ஐ.நா., சபை அறிவித்ததன் அடிப்படையில், அதற்கான விழிப்புணர்வு உலகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.அதில், ஆசியாவின் சிறந்த உயிர்ச்சூழல் மண்டலமாக கருதப்படும், நீலகிரி மாவட்டத்தில் 'பிளாஸ்டிக்' பயன்பாடுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, மட்காத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதில், நம் ராணுவ மையம் அமைந்துள்ள குன்னுார் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியம், உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் வகையில் கடந்த, 2 மாதங்களாக பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் துாய்மை பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. உலக சுற்றுச்சூழல் தினத்தை, ஒரு நாள் விழாவாக மட்டும் கொண்டாடும் அரசு, சுற்றுச்சூழல் மாசுக்கான அடித்தளமாக உள்ள பிளாஸ்டிக் ஒழிப்புக்கு நிரந்தர நடவடிக்கை எடுக்காமல் உள்ளது, பல்வேறு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிளாஸ்டிக் கவர்களில் வரும் பொருட்களின் பயன்பாடு முடிந்தவுடன், கவர்களை ஆங்காங்கே வீசாமல், மறுசுழற்சி செய்யும் மையங்களுக்கு வழங்க மக்கள் முன்வருவதில்லை. இதற்கான போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளாட்சி அமைப்புகளும் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், ஊட்டி, குன்னுார், கூடலுார், பந்தலுார், கோத்தகிரி, குந்தா தாலுகா பகுதிகளில், வனம் மற்றும் புதர்கள் சூழ்ந்த பகுதிகளில் பிளாஸ்டிக் உட்பட குப்பை கழிவுகள் கொட்டப்படுகிறது. ஆங்காங்கே உள்ள நீரோடைகளில் பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டுவதால் நீர்நிலைகளும் மாசு ஏற்பட்டு, இந்த நீரை பயன்படுத்தும் வனவிலங்குகளுக்கும், மக்களுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதில், மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில், குப்பை மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுத்தாத இடங்களில் உள்ள குடியிருப்புவாசிகள்; உள்ளாட்சி அமைப்பின் ஊழியர்கள், புதர்கள் சூழ்ந்த மறைவான பகுதிகளில், பிளாஸ்டிக் கவரில் குப்பைகளை நிரப்பி கொட்டி செல்வது அதிகமாக உள்ளது.

ஆற்றோரம் கழிவுகளை கொட்ட கூடாது

பந்தலுார் சேரங்கோடு மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சி பகுதிகளில், பிளாஸ்டிக் கழிவுகளை வன விலங்குகள் வந்து செல்லும் வனப்பகுதிகளில் கொட்டி, மூடி வருவதால் வன விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. நிலம் மற்றும் நிலத்தடி நீரும் மாசடைந்து வருகிறது. சமீபத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்ட ஒரு பெண்யானை, வயிற்றில் குட்டியுடன் இறந்தசம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதேபோல, கூடலுார் இரும்புபாலம் வழியாக செல்லும், பாண்டியார் - புன்னம்புழா ஆறு, கோழிக்கோடு சாலையை கடந்து, ஓவேலி குண்டம்புழா வழியாக, கேரள மாநிலம் சாலியார் ஆற்றில் சங்கமிக்கிறது. இந்த ஆற்றில், கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், 'பிளாஸ்டிக்' கழிவுகளை இங்கு வீசி செல்கின்றனர். இதனை நிரந்தரமாக தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. எந்த ஒரு அரசின் திட்டமானாலும், மக்களின் ஒத்துழைப்பை பெற போதிய விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி கொண்டே இருக்கே வேண்டும். அதில், தொய்வு ஏற்பட்டால், மீண்டும் பிளாஸ்டிக் ஆதிக்கம் அதிகரிக்கும். எனவே, நீலகிரி மாவட்டத்தில் 'பிளாஸ்டிக்' ஒழிப்பு திட்டத்தை முழுமையான மக்களின் இயக்கமாக மாற்றினால் பெரும்பாலான வனப்பகுதி; நீர்நிலைகள் காப்பாற்றப்படும். மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், குப்பை மேலாண்மை திட்டத்தை கட்டாயம் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஐந்தரை ஆண்டுகளில்1700 டன் மறுசுழற்சி

குன்னுாரில் முதன்முறையாக நகராட்சி ஒத்துழைப்புடன் குப்பை மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி வரும் 'கிளீன் குன்னுார்' அமைப்பு தலைவர் சமந்தா அயனா கூறுகையில், ''கடந்த, ஐந்தரை ஆண்டுகளில், குன்னூர் நகராட்சியில், 1700 டன், பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சிசெய்து, சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவு சேகரிக்க, 7 ரூபாய் செலவாகிறது. கோவிட் பாதிப்புக்கு பிறகு, ஆன்லைன் ஷாப்பிங் பேக்கிங் மற்றும் உணவு பொருட்கள் பேக்கிங் ஆகியவற்றின் பிளாஸ்டிக் அதிகரித்துள்ளது. அதிகமான பிளாஸ்டிக் பயன்படுத்துவதை மக்கள் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, சிறிய ஷாம்பு பாக்கெட் அதிகம் வாங்குவதற்கு பதில், ஒரு பாட்டில் வாங்குவதால், அவை பயன்பாடு குறையும்,'' என்றார்.

சுற்றுச் சூழலுக்கு பாதுகாப்பான 'உயிரி பிளாஸ்டிக்'...

சென்னை சவீதா பல்கலைக்கழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தலைவர், விஞ்ஞானி அசோக்குமார் கூறுகையில், ''எனது தலைமையிலான பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு, கரிம உணவு கழிவுகள், வீட்டு கழிவுநீர்களில் வளர்க்கப்படும் நுண்ணீர் பாசிகள் மூலம், பூஜ்ஜிய விலை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, புதிதாக 'உயிரி பிளாஸ்டிக்' உருவாக்கியுள்ளோம். இவை உணவு கழிவுகளுடன் சேர்த்து சிதையும் வகையில் உருவாக்கியுள்ளோம்.இதற்கான பாசிகளை கழிவுநீரில் வளர்ப்பதால் எந்த செலவும் இல்லை. குப்பை கிடங்கில் குப்பைகள் சேருவதை தவிர்க்க முடியும். இதன் உற்பத்தி செலவு, 50 வரை குறைகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் உயிரி பிளாஸ்டிக்கில் சில மாதங்களில் இயற்கையாக சிதைவடைந்து விடும். மண் மற்றும் கடல் மாசுபடுவதை தடுக்கும். நகர புறம் மற்றும் கிராமப்புறங்களில் கழிவுகளை செல்வமாக மாற்ற முடியும். இதில் தயாரிக்கப்படும் பைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முன் மாதிரியாகவும் வழங்குகிறது. இந்தியாவின் பசுமை வளர்ச்சி பாதைக்கு வித்திடுகிறது. நீலகிரி போன்ற, பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ள பகுதிகளில், பிளாஸ்டிக்கு மாற்றாக இதன் பயன்படுத்த முடியும். அவை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்,'' என்றார்.

சில மணிநேரம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் அழிய 1,000 ஆண்டுகள்

கூடலுார் பாதுகாப்பு மையம் பொது செயலாளர் சுப்ரமணியம் கூறுகையில்,''கடந்த, 1862 ஆம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பவர், 'செல்லுலோஸ்' என்ற பொருளிலிருந்து பிளாஸ்டிக்கை தயாரித்தார். தொடர்ந்து, முதல் உலகப்போரில் டுபாண்ட் அமெரிக்க நிறுவனம்வெடிபொருள் பிளாஸ்டிக் தொழிற்சாலையை தொடங்கி, அதன்பின், பல்வேறு பொருட்களை பிளாஸ்டிக்கில் உருவாக்கினர். தற்போது, நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களிலும், பிளாஸ்டிக் ஒன்றிணைந்து உள்ளது. ஒருமுறை பயன்படுத்திய பின் துாக்கி எரியப்படும், பிளாஸ்டிக் இயற்கையை பல்வேறு வகையிலும் பாதிக்க செய்கிறது. மட்கும் தன்மை இல்லாததால், நிலம், நீர் மாசுபட்டு அனைத்து உயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதாக உள்ளது. ஒரு பிளாஸ்டிக் பையின் பயன்பாடு சில மணி நேரங்கள் என்றாலும், அவை அழிய, 1,000 ஆண்டுகள் ஆகும்,'' என்றார். -நிருபர் குழு-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை